தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2023ல் அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள்: பத்தில் ஒருவர் இந்தியர்

1 mins read
34baacf6-65a3-41f8-9338-3843da45e879
2023ல் 700,000க்கும் அதிகமான அமெரிக்காவுக்கான வருகையாளர் விசா விண்ணப்பங்கள் இந்தியாவில் செய்யப்பட்டன. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: சென்ற ஆண்டு அமெரிக்க விசாக்களுக்கான விண்ணப்பங்களில் பத்தில் ஒன்று இந்தியக் குடிமக்களிடமிருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 60 விழுக்காடு அதிகம்.

புதுடெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் மும்பை, சென்னை, கோல்கத்தா, ஹைதராபாத் ஆகியவற்றில் உள்ள துணைத் தூதரகங்களும் சென்ற ஆண்டு 1.4 மில்லியன் விசாக்களைக் கையாண்டதாக இந்திய நாளிதழான ‘டெக்கன் ஹெரல்டு’ தெரிவித்தது.

இதுவரை இல்லாத அளவில், சென்ற ஆண்டு வருகையாளர் விசாக்களுக்கு 700,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் செய்யப்பட்டதாக தூதரகம் கூறியது.

தொழில் அல்லது சுற்றுப்பயணக் காரணங்களுக்காக அமெரிக்காவுக்குச் செல்லும் சில நாடுகளின் சுற்றுப்பயணிகள் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விசாவைப் பயன்படுத்தி, வேலைக்காகவோ கல்விக்காகவோ அவர்கள் அமெரிக்காவில் தங்க முடியாது.

அதிகரித்துள்ள விசா தேவையைப் பூர்த்திசெய்ய, தூதரகமும் துணைத் தூதரகங்களும் சென்ற ஆண்டு தொடக்கத்தில் மூன்று மாதங்களுக்கு மும்பையில் அவற்றின் ஊழியர் எண்ணிக்கையை அதிகரித்து, தொழில்நுட்பச் செயல்முறைகளை மேம்படுத்தின.

இதனால் வருகையாளர் விசா நேர்காணல்களுக்குக் காத்திருக்கும் நேரம், சராசரியாக 1000 நாள்களிலிருந்து 250 நாள்களுக்குக் குறைந்தது.

சென்ற ஆண்டு இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகக் குழு 140,000க்கும் மேற்பட்ட மாணவர் விசாக்களை வழங்கியது.

அமெரிக்காவில் பயிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களில் கால்வாசிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியக் குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்