பினாங்கு: அதிசயக் குழந்தைத் திட்டத்தின்கீழ் மலேசியாவின் பினாங்கில் கடந்த இரு வாரங்களில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக மக்கள் ஓசை செய்தி தெரிவித்துள்ளது.
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஸ்ரீ சத்ய சஞ்சீவனி மருத்துவமனைகள் குழுமத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்ளூர் மருத்துவர்களின் துணையுடன் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர்.
இந்தத் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகப் பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் துணைத் தலைவரும் சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இவ்வாண்டு துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகத்தின் துணையுடன் பினாங்கு பொது மருத்துவமனையில் அந்த அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அறுவை சிகிச்சையில் பங்கெடுத்த மருத்துவர்களைச் சிறப்பிக்கும் வகையில், பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் எம்.பி.யுமான ஆர்.எஸ்.என். ராயர், தண்ணீர்மலைக் கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அந்த 23 குழந்தைகளுக்குப் பிறப்பிலேயே ஏற்பட்ட இதயக் கோளாறுகளைச் சரிசெய்ய அறுவை சிகிச்சைகள் உதவியதாகத் தெரிவிக்கப்பட்டது.

