தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்ய அதிபருடன் இந்திய வெளியுறவு அமைச்சர் திடீர் சந்திப்பு

2 mins read
42d3c1fc-89c5-44fc-a017-6594b0bf2193
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோவ் ஆகியோருடன் முக்கிய கூட்டம் ஒன்றில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர். - படம்: இபிஏ

புதுடெல்லி: மேற்கத்திய நாடுகளின் வேண்டுகோள்களைப் பின்னுக்குத் தள்ளி ரஷ்ய அதிபரை இந்தியத் தூதர் நேரில் சந்தித்துப் பேசி இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

கிரெம்ளின் மாளிகையில் டிசம்பர் 27ஆம் தேதி அதிபர் விளாடிமிர் புட்டினை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்ததாக அச்செய்தி கூறியது.

ஆசியாவின் பலம்பொருந்திய நாடு ஒன்றுடன் உறவை நீட்டிப்பதை, தன்னைத் தனிமைப்படுத்த முயலும் மேற்கத்திய நாடுகளுக்கு உணர்த்த ரஷ்யா இச்சந்திப்பைப் பயன்படுத்திக்கொண்டு உள்ளது.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியது முதல் ரஷ்யாவுடன் இந்தியா நடுநிலைப்போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. மாஸ்கோவுடன் கொண்டிருக்கும் நீண்டகால உறவை இந்தியா அதற்குக் காரணமாகக் காட்டுகிறது.

இந்தியாவுக்குத் தேவைப்படும் ராணுவ ஆயுதங்களை ரஷ்யா நீண்டகாலமாக விநியோகித்து வருகிறது.

உக்ரேன் மீது படையெடுத்த காரணத்தால் ரஷ்யாவின் எண்ணெய் விற்பனைக்கு இடையூறு விளைவிக்கும் நோக்குடன் அதன் மீது அனைத்துலக பொருளியல் தடை விதிக்கப்பட்டபோதும் அந்தத் தடையை இந்தியா பொருட்படுத்தவில்லை.

மாறாக, ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய்யை இந்தியா வாங்கியது. அதன் மூலம் ரஷ்யாவுக்கான நிதி ஆதரவை இந்தியா அதிகரித்தது. அந்தப் போக்கு அமெரிக்காவுக்கு எரிச்சலைத் தந்தது.

இந்நிலையில், புதன்கிழமை நடந்த சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதம் ஒன்றை திரு புட்டினிடம் அமைச்சர் ஜெய்சங்கர் அளித்தார். ரஷ்யா-இந்தியா உறவு நிலை குறித்து திரு மோடி அந்தக் கடிதத்தில் தமது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டதாக திரு ஜெய்சங்கர் கூறினார்.

திரு புட்டினைச் சந்திப்பதற்கு முன்னதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சரையும் திரு ஜெய்சங்கர் பார்த்துப் பேசினார்.

குறிப்புச் சொற்கள்
ர‌ஷ்யா