பாரம்பரியம் மாறாமல் சீனப் புத்தாண்டைக் கொண்டாடிய இந்தியக் குடும்பம்

பாரம்பரியம் மாறாமல் சீனப் புத்தாண்டைக் கொண்டாடிய இந்தியக் குடும்பம்

2 mins read
40c95f14-89b9-4713-820f-aec81413d253
பாரம்பரியம் மாறாமல் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுகிறது திரு எரியா ராஜா லூர்து குடும்பம். - படம்: மோகனன் வில்லவன்

கோலாலம்பூர்: பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் பிற இனத்தவரின் பண்டிகைகளைக் குடும்பங்கள் கொண்டாடுவது வழக்கம்.

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டை அம்பாங்கில் உள்ள தாமான் கெசுமா என்ற பகுதியில் கொண்டாடி மகிழ்ந்தது ஓர் இந்தியக் குடும்பம்.

்குடும்பங்கள் ஒன்றுகூடுவதும் உறுப்பினர்களிடையே பிணைப்பை வலுப்படுத்துவதும் சீனப் புத்தாண்டின் முக்கிய கருப்பொருள்களில் ஒன்று. அதைக் கடைப்பிடிக்கும் வகையில் சீனப் புத்தாண்டைக் கொண்டாடியது எரியா ராஜா லூர்து குடும்பம்.

“சீனப் புத்தாண்டுக்கு முந்தைய நாள், ஸ்டீம்போட் (steamboat) உணவுடன் கொண்டாட்டத்தைத் தொடங்குவோம்,” என்றார் லூர்து குடும்பத்தைச் சேர்ந்த திருவாட்டி சுவாந்தரி சுப்பிரமணியம்.

அதையடுத்து சீனப் புத்தாண்டின் முதல், இரண்டு நாள்களிலும் லூர்து குடும்பம் ஒன்றுகூடும். நூடல்ஸ் உணவு கட்டாயம் இடம்பெறும். பாரம்பரிய சீன உணவுகளை ஒன்றாகக் கலந்து சாப்ஸ்டிக்ஸ் குச்சியை வைத்து அவற்றை மேலே உயர்த்தி தட்டில் போடும் ‘யீ சாங்’ (யூ‌ஷெங்) என்ற பாரம்பரிய நடைமுறையை லூர்து குடும்பம் பின்பற்ற தவறுவதில்லை.

திரு எரியா ராஜா லூர்தின் குடும்பம் சீனப் புத்தாண்டைப் பாரம்பரிய ‘யீ சாங்’ உணவுடன் கொண்டாடுகிறது.
திரு எரியா ராஜா லூர்தின் குடும்பம் சீனப் புத்தாண்டைப் பாரம்பரிய ‘யீ சாங்’ உணவுடன் கொண்டாடுகிறது. - படம்: மோகனன் வில்லவன்

உணவிலும் வழக்கங்களைப் பின்பற்றுவதில் மட்டுமின்றி சீனப் புத்தாண்டின் பாரம்பரிய உடையை அணிவதிலும் லூர்து குடும்பம் கவனமாக உள்ளது.

சீனப் புத்தாண்டுடன் தொடர்புடைய பிற நம்பிக்கைகளையும் கடைபிடிப்பதாகச் சொன்னார் திருவாட்டி சுவாந்தரியின் கணவர் திரு எரியா ராஜா லூர்து.

“சீனப் புத்தாண்டு காலத்தில் நாங்கள் வீட்டைப் பெருக்க மாட்டோம். குப்பையையும் வீசமாட்டோம். புத்தாண்டுக்கு முன்னதாகவே அவற்றை எல்லாம் செய்து முடித்துவிடுவோம்,” என்றார் அவர்.

60 வயது திரு ராஜா, சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் தமது குடும்பத்தில் பல ஆண்டுக்குமுன் தொடங்கியதைப் பகிர்ந்துகொண்டார்.

“சீன நண்பர்களைச் சென்று சந்திப்போம். ஆனால் அவர்கள் பிள்ளைகள் வளர்ந்த பிறகு அவர்களின் வீடுகளில் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவது குறைந்தது. அதற்குப் பதிலாக அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தனர். எனவே நாங்களே சீனப் புத்தாண்டைக் கொண்டாடத் தொடங்கிவிட்டோம்,” என்று திரு ராஜா விளக்கம் அளித்தார்.

ஒவ்வோர் ஆண்டும் சீனப் புத்தாண்டின்போது திரு ராஜாவின் வீட்டில் அவரது உடன்பிறப்புகள், அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் ஒன்றுகூடுகின்றனர்.

சீனர்களின் வீட்டைப்போல தம்முடைய வீட்டையும் திரு ராஜா அலங்கரிப்பதால் பார்ப்பவர்கள் சற்று குழம்பிப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

சீனப் புத்தாண்டின்போது திரு எரியா ராஜா லூர்தின் உடன்பிறப்புகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் அவரின் வீட்டில் ஒன்றுகூடுவர்.
சீனப் புத்தாண்டின்போது திரு எரியா ராஜா லூர்தின் உடன்பிறப்புகள், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் ஆகியோர் அவரின் வீட்டில் ஒன்றுகூடுவர். - படம்: மோகனன் வில்லவன்
குறிப்புச் சொற்கள்