புதுடில்லி: இந்திய அரசாங்கம் அதன் ஆகாயப் படையை வலுப்படுத்த 114 ‘ரஃபேல்’ விமானங்களை பிரான்சிடம் இருந்து வாங்கவிருப்பதாக தினமலர் ஊடகம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) செய்தி வெளியிட்டுள்ளது.
இதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரான்சின் ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம், அவ்வகை விமானங்களை தயாரித்துவருகிறது. அந்நிறுவனத்திடம் ஏற்கெனவே ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கி அதன் ஆகாயப்படையில் இணைத்துள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடந்த ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ஆயுதத் தாக்குதலில் அவை பயன்பட்டன. இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் விமானங்களை வாங்க அரசாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த தலைமுறை விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா ஆர்வமாக உள்ளது. அமெரிக்காவும், ரஷ்யாவும் அவற்றின் ‘எஃப்’ 35, ‘சுக்கோய்’ 57 ரக விமானங்களை இந்தியாவிடம் விற்கத் தயாராக உள்ளன.
இருப்பினும் பிரான்சில் தயாரிக்கப்படும் ராஃபேல் விமானமே இந்தியாவை அதிகம் கவர்ந்துள்ளது. அதன்படி, ரூபாய் 3.25 லட்சம் கோடியில் 114 விமானங்களை வாங்க இந்தியா திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்திட்டத்தில் இந்தியாவிலேயே தயாராகும் ஆயுதங்களை பொருத்தவும் 30 விழுக்காடு உள்நாட்டு உபரிப் பாகங்களை பயன்படுத்தவும் ஃபிரஞ்சு நிறுவனத்திடம் வலியுறுத்தவும் இந்திய அரசாங்கம் விழைகிறது.
இதன் தொடர்பான உயர்மட்டக் கூட்டம் மத்திய பாதுகாப்பு அமைச்சில் விரைவில் நடைபெறுவுள்ளது. பிறகு பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் மத்திய அரசின் பரிசீலனைக்கு திட்டம் முன்வைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
மத்திய அரசும் அனுமதி அளித்தால், இந்தியாவின் மிகப் பெரிய தற்காப்பு ஒப்பந்தமாக இத்திட்டம் அமையும்.

