வாஷிங்டன்: இந்திய வம்சவாளியைச் சேர்ந்த திரு விவேக் ராமசாமி, 37, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
சுகாதாரப் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களை நடத்திவரும் திரு விவேக், அண்மையில் 'ஃபாக்ஸ் நியூஸ்' செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போது இதனைத் தெரிவித்தார்.
இவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். அக்கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி இருவரும் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திரு விவேக்கின் பெற்றோர்களான விவேக் கணபதி - கீதா ராமசாமி கேரளாவின் பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரியில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தனர்.
ஒகையோவின் சின்சினாட்டி நகரில் பிறந்த திரு விவேக், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் யேல் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்.
இவர் இரண்டு நூல்களையும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். ஒகையோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இருக்கும் அபூர்வா திவாரி என்பவரை இவர் மணந்துகொண்டார்.
தகுதி அடிப்படையில் குடியேற்ற அனுமதி வழங்குவதை வலுவாக ஆதரிக்கும் திரு விவேக், அதில் மென்மையான போக்கிற்கு அல்லது சட்ட மீறலுக்கும் இடம் தரமாட்டேன் என்றும் குறிப்பிட்டார்.