தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
‘மனைவியின் மகப்பேற்றை நேரில் பார்த்ததால் மனநலப் பிரச்சினை’

மருத்துவமனையிடம் $880 மில்லியன் இழப்பீடு கேட்டு இந்திய வம்சாவளி ஆடவர் வழக்கு

1 mins read
42c0ccea-fc38-4e66-b5f1-6211d971ee2b
மாதிரிப்படம்: - ஐஏஎன்எஸ்

மெல்பர்ன்: மனைவியின் மகப்பேற்றை நேரில் கண்டபின் தான் மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்காக மருத்துவமனை தனக்கு ஒரு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் (S$880 மில்லியன், ரூ.5,373 கோடி) இழப்பீடு தர வேண்டும் எனக் கோரி இந்திய வம்சாவளி ஆடவர் ஒருவர் வழக்கு தொடுத்தார்.

அனில் கொப்புலா என்ற அந்த ஆடவரின் மனைவி, கடந்த 2018ஆம் ஆண்டு மெல்பர்னில் உள்ள ராயல் மகளிர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்தார்.

அப்போது, தன் மனைவி குழந்தை பெற்றெடுப்பதை நேரில் காணுமாறு அம்மருத்துவமனை தன்னை ஊக்குவித்தது அல்லது அனுமதித்தது என்று அனில் கூறினார். அவருடைய மனைவியும் பிள்ளையை நலமாக ஈன்றெடுத்தார்.

ஆயினும், அப்போது தன் மனைவியின் உறுப்புகளையும் ரத்தத்தையும் கண்டதால் தமக்கு மனநோய் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, தனக்கு உரிய பராமரிப்பு வழங்கும் பொறுப்பிலிருந்து மருத்துவமனை தவறிவிட்டது என்றும் அதனால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரி, விக்டோரியா உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபரில் அனில் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கில் திங்கட்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. அனிலின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஜேம்ஸ் கோர்ட்டன், ஒருவர்க்குப் பொருளியல் நோக்கில் இழப்பு ஏற்படாத நிலையில் இழப்பீடு கோர சட்டம் அனுமதிப்பதில்லை என்றும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்