இந்தியச் சமூகம் கல்வி, திறன்கள், வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்: அன்வார்

இந்தியச் சமூகம் கல்வி, திறன்கள், வேலைவாய்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்: அன்வார்

2 mins read
e71d1d5f-3047-4499-acd9-9f39ab549e70
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் (இடது) வியாழக்கிழமை (ஜூலை 23) இந்தியச் சமுதாயத் தலைவர்களுடன் முக்கியச் சந்திப்பை நடத்தினார். - படம்: மலேசியப் பிரதமர் அலுவலகம்

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள இந்தியச் சமுதாயத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் தரமான கல்வி, விரிவான சமூக நலன், திறன் மேம்பாடு, சிறந்த வேலைவாய்ப்புகள் ஆகியவற்றுக்கே முதன்மை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை (ஜூலை 23) நடைபெற்ற இந்தியச் சமுதாயத் தலைவர்களுடனான முக்கியச் சந்திப்பிற்குப் பிறகு, தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் திரு அன்வார் இதனைத் தெளிவுபடுத்தினார்.

நிதி அமைச்சருமான திரு அன்வார், மித்ரா எனும் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மற்றும் அது சார்ந்த அமைப்புகள் அனைத்தும் அடித்தள அளவில் மேலும் துடிப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியச் சமுதாய மக்களுடன் அமைப்புகள் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அவர் நினைவுறுத்தினார். கள நிலவரத்திற்கு ஏற்ப மக்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து, அரசு நடைமுறைப்படுத்தும் ஒவ்வொரு மேம்பாட்டுத் திட்டத்தின் பலன்களும் உண்மையில் உதவி தேவைப்படுவோருக்குச் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

கருணை, பொறுப்புக்கூறல், வெளிப்படையான நல்லாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் திட்டங்களைச் செயல்படுத்துவது மிகவும் அவசியமானது என்று பிரதமர் அன்வார் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் சமுதாயத்தின் எந்தவொரு பிரிவினரும் பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதிசெய்யவே இந்த அணுகுமுறை பின்பற்றப்படுவதாக அவர் தெரிவித்தார் என்று பெர்னாமா செய்தி குறிப்பிட்டது.

இதன் மூலம் அனைத்து மலேசியர்களுக்கும் நியாயமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வழிவகுக்கப்படும் என்றும் திரு அன்வார் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
அன்வார்இந்தியர்மேம்பாடு