தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய மாணவியை உயிரோடு புதைத்தவருக்கு ஆயுள் தண்டனை

2 mins read
a72dea4f-fd3c-40b2-8d2f-d9ebb5f007df
கொல்லப்பட்ட ஜஸ்மீன் கவுர். - படம்: டுவிட்டர்

மெல்பர்ன்: கடந்த 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் 21 வயது இந்திய மாணவி ஒருவர் கொல்லப்பட்டார்.

அம்மாணவியைப் பழிவாங்க நினைத்த அவரின் முன்னாள் காதலன், அவரது உடலை நாடாவாலும் கயிற்றாலும் கட்டிப் புதைத்ததாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜஸ்மீன் கவுர் என்ற அம்மாணவி 2021 மார்ச் 5ஆம் தேதி நார்த் பிளிம்ப்டன் நகரில் தமது வேலையிடத்திலிருந்து தரிக்ஜோத் சிங், 23, என்ற ஆடவரால் கடத்தப்பட்டார்.

பின்னர் ஜஸ்மீன் பெருங்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கார்மென் மட்டயோ குறிப்பிட்டார்.

அந்தத் தாதிமை மாணவி, பெரும் சித்திரவதைகளை எதிர்கொண்டதாகவும், கண்கள் கட்டப்பட்டு, உணர்விருந்த நிலையிலேயே புதைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தரிக்ஜோத் சிங், ஜஸ்மீனின் கழுத்தை அறுத்தபோதும் அதனால் அவர் உயிரிழக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

மாறாக, மறுநாள் மார்ச் 6ஆம் தேதிதான் அவர் மாண்டுபோனதாக உடற்கூறாய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

“பழிவாங்கும் நோக்குடன் இந்தக் கொலை செய்யப்பட்டுள்ளது,” என்றார் திரு மட்டயோ.

அக்கொலைக்குச் சில மணி நேரத்திற்குமுன், அங்குள்ள ஒரு கடையிலிருந்து கையுறை, கயிறு, மண்வெட்டி ஆகியவற்றை தரிக்ஜோத் வாங்கியதைக் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி காட்டியது.

காதல் முறிந்துபோனதை ஏற்றுக்கொள்ள முடியாததால் ஜஸ்மீனைக் கொல்ல தரிக்ஜோத் திட்டமிட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

தரிக்ஜோத்திற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் அவர் எவ்வளவு காலத்திற்கு பரோலில் வெளிவர முடியாது என்பது அடுத்த மாதம் தீர்மானிக்கப்படும்.

தெற்கு ஆஸ்திரேலியாவில், கொலைக் குற்றவாளி ஒருவர் குறைந்தது 20 ஆண்டுகாலத்திற்கு பரோலில் வெளியே வரமுடியாது.

குறிப்புச் சொற்கள்