தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்குள் மோதல்; குத்திக் கொல்லப்பட்ட இளையர்

2 mins read
107e2043-d8d1-49d4-adc1-99f8a22770ec
மாதிரிப்படம்: - பிக்சாபே

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ‘எம்.டெக்.’ பயின்று வந்த 22 வயது இளையர் ஒருவர் குத்திக்கொல்லப்பட்டதாக அவருடைய உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மெல்பர்ன் நகரில் கடந்த சனிக்கிழமை (மே 4) உள்ளூர் நேரப்படி 9 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் அதில் இன்னொரு மாணவர் காயமடைந்ததாகவும் யஷ்வீர் என்ற அந்த உறவினர் கூறினார்.

வாடகை தொடர்பில் அவர்களுக்குள் மோதல் எழுந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவர்களை விலக்கிவிடச் சென்றபோது நவ்ஜீத் சந்து என்பவரை இன்னொருவர் கத்தியால் குத்தியதாகச் சொல்லப்படுகிறது.

“நவ்ஜீத்திடம் கார் இருந்தது. அதனால், தன்னுடைய பொருள்களை எடுத்துச் செல்ல தன் வீட்டிற்கு வரும்படி அவருடைய நண்பரான இன்னோர் இந்திய மாணவர் அழைத்திருந்தார். அந்த நண்பர் வீட்டிற்குள் சென்றதும் சத்தம் கேட்டது. அதனையடுத்து நவ்ஜீத் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சண்டை மூண்டிருந்தது. சண்டையை விலக்கிவிட நவ்ஜீத் சென்றபோது, அவர்களில் ஒருவர் கத்தியால் நவ்ஜீத்தின் நெஞ்சில் குத்திவிட்டார்,” என்று ராணுவத்தில் பணியாற்றும் யஷ்வீர் விவரித்தார்.

கொலையான நவ்ஜீத்தும் அவரைக் கத்தியால் குத்தியவரும் ஹரியானா மாநிலம், கர்னால் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து ஞாயிறு காலை தங்களுக்குத் தகவல் கிட்டியதாகத் திரு யஷ்வீர் கூறினார்.

நவ்ஜீத் கொல்லப்பட்ட தகவலறிந்து அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

“நவ்ஜீத் திறமையான மாணவர். விடுமுறைக்காக வரும் ஜூலை மாதம் அவர் சொந்த ஊருக்கு வரத் திட்டமிட்டிருந்தார்,” என்று திரு யஷ்வீர் சொன்னார்.

நவ்ஜீத் ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் கல்வி விசாவில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். தன் மகனின் கல்விச் செலவிற்காக நவ்ஜீத்தின் தந்தையார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டதாகத் திரு யஷ்வீர் குறிப்பிட்டார்.

நவ்ஜீத்தின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்