இந்திய ரயில் பயணக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன

1 mins read
6e86fc09-a312-4df0-8d70-a2905b68be37
பணவீக்கமும் ரயில்வே பராமரிப்புச் செலவுகளும் விலை உயர்வின் காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. - படம்: தினத்தந்தி

சென்னை: இந்தியாவில் ரயில் பயணக் கட்டணங்கள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) உயர்த்தப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்யப்படாத மக்கள் சாதாரணமாக பயன்படுத்தும் ரயில் பெட்டிப் பிரிவில் 215 கிலோமீட்டர் தூரத்துக்குமேல் செல்லும் பயணங்களுக்கு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு காசு உயரும்.

பணவீக்கமும் ரயில்களின் பராமரிப்புக்கான செலவும் கட்டண உயர்வுக்கு காரணங்கள் என்று இந்திய ரயில் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட அதிவேக அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கும் அஞ்சல் ரயில்களுக்கும் 215கிலோ மீட்டருக்கு மேற்பட்ட பயணங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 2 காசு விதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, குளிர்சாதன வசதியுடன் அல்லது இல்லாமல் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணங்களுக்கு அந்தக் கட்டண உயர்வு பொருந்தும்.

தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், அந்தியோதியா, வந்தே மெட்ரோ, அம்ரித் பாரத் உள்ளிட்ட ரயில்களில் பயணம் செய்வோருக்கும் கட்டணம் உயர்த்தப்படும். இந்தக் கட்டண உயர்வின் வழியாக ரயில் போக்குவரத்துத் துறைக்கு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் விலைவாசி, எரிபொருள் கட்டண அதிகரிப்பு, அன்றாட செலவுகள் என மக்கள் போராடிவரும் நிலையில் அவர்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் சேவைக்கும் கட்டணங்கள் உயர்வது பெரும் சுமையாகவே கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்