ஜோகூர் பாரு: வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் முக்கியச் சக்தியாக விளங்குவார்கள் என்று மஇகா துணைத் தலைவர் எம். அசோஜன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் ஐந்து விழுக்காட்டுக்கும் அதிகமான இந்திய வாக்காளர்களைக் கொண்ட 24 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்தத் தொகுதிகளில் பெரும்பாலானவை மலாய், மலாய் அல்லாத வாக்காளர்களின் எண்ணிக்கை சம அளவில் உள்ள பகுதிகளாகும்.
கடந்த தேர்தலைவிட தற்போது இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 80,000 அதிகரித்து, கிட்டத்தட்ட 200,000 ஆகக் கூடியள்ளது. 2022 மாநிலத் தேர்தலில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 120,000 ஆக இருந்தது.
குறிப்பாக, கோத்தா இஸ்கந்தர் தொகுதியில் அதிகபட்சமாக 18,000க்கும் மேற்பட்ட இந்திய வாக்காளர்கள் உள்ளனர். ஸ்கூடாய், பெர்லிங், திராம், புத்ரி வாங்சா ஆகிய தொகுதிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தத் தேர்தலில், முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி தலைமையிலான பாரிசான் நேஷனல் அரசாங்கம் இந்தியச் சமூகத்திற்காகச் செய்துள்ள நன்மைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க மஇகா தீவிரமாக உழைத்து வருகிறது. தேர்தலில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமான இந்தியர்களின் ஆதரவைப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று எம். அசோஜன் கூறினார்.
ஜோகூர் அரசாங்கம் ‘பந்துவான் காசி ஜோகூர்’ (BKJ) போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் இந்தியச் சமூகத்திற்குத் தொடர்ந்து உதவி வருகிறது.
மேலும், கம்பங் தெலுக் ஜாவாவில் இந்துக்களுக்கான இறுதிச் சடங்கு வளாகப் பிரச்சினை போன்ற 20 ஆண்டுகால கோரிக்கைகளுக்குத் தற்போதைய அரசு தீர்வு கண்டுள்ளது. நான்கு தமிழ்ப் பள்ளிகளை இடமாற்றம் செய்ய நில ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
ஜோகூர் மஇகா தலைவர் கே. ராவன் குமார் தலைமையிலான சிறப்புக் குழு, மாவட்ட, நில அலுவலகங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து ஆலயப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது.
ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் மொத்தம் 2.72 லட்சம் வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர், இதில், மலாய்க்காரர்கள் 54 விழுக்காடு, சீனர்கள் 36 விழுக்காடு, இந்தியர்கள் 7 விழுக்காடு,
இந்தியர்களின் ஆதரவு பாரிசான் நேஷனல் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க உதவும் என்றார் அசோஜன்.

