கோலாலம்பூர்: கடந்த 2024ஆம் ஆண்டு கோலாலம்பூரின் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் திடீரென ஏற்பட்ட புதைகுழியில் விழுந்து உயிரிழந்த இந்தியச் சுற்றுலாப் பயணியின் குடும்பத்தினர், மலேசிய அரசிடம் 824,000 ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளனர்.
உயிரிழந்த ஜி.விஜயலட்சுமி என்ற பெண்ணின் சார்பில் பேசிய வழக்கறிஞர் எம்.பார்த்திபன், “2023ஆம் ஆண்டு மரம் விழுந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்குக் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டின் அடிப்படையில் இந்தத் தொகை கணக்கிடப்பட்டுள்ளது,” என்றார்.
இதன் தொடர்பில் கோலாலம்பூர் மாநகராட்சியுடனும் கூட்டரசுப் பகுதிகள் அமைச்சர் ஹன்னா இயோவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மரம் விழுந்த வழக்கில், பராமரிப்பில் மாநகராட்சி அலட்சியமாக இருந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேபோல், இந்தப் புதைகுழி விபத்திலும் மாநகராட்சியின் அலட்சியத்தை எங்களால் உறுதிப்படுத்த முடியும்,” என்று வியாழக்கிழமை (மே 7) திரு பார்த்திபன் செய்தியாளர்களிடம் கூறினார்.
அப்போது, திருவாட்டி விஜயலட்சுமியின் மகன் எம். சூர்யாவும் உடனிருந்தார்.
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 48 வயது விஜயலட்சுமி, கடந்த 2024 ஆகஸ்ட் 23ஆம் தேதி ஜாலான் மஸ்ஜித் இந்தியா பகுதியில் நடந்து சென்றபோது திடீரென உருவான எட்டு மீட்டர் ஆழமுள்ள புதைகுழிக்குள் விழுந்தார்.
தேடுதல், மீட்புப் பணிகள் ஒன்பது நாள்களாக நீடித்தபோதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், பாதுகாப்புக் காரணங்களுக்காக அப்பணிகள் நிறுத்தப்பட்டன.
அவ்விபத்து குறித்து விசாரணை நடத்திய மாநகராட்சி தலைமையிலான பணிக்குழு, வேதிப்பொருளால் ஏற்பட்ட அரிப்பு மற்றும் மண்ணின் உறுதித்தன்மையின்மை காரணமாக கழிவுநீர்க் குழாய் கட்டமைப்பு வலுவிழந்ததே புதைகுழி உருவாக முக்கியக் காரணம் எனக் கண்டறிந்தது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, புதன்கிழமை தேசியப் பதிவுத்துறையிடமிருந்து தம் தாயாரின் இறப்புச் சான்றிதழைத் திரு சூர்யா பெற்றுக்கொண்டார்.
இதற்கிடையே, “இந்த ஈராண்டுகளில் மரணச் சான்றிதழைப் பெறுவதற்காக மலேசியாவிற்குப் பலமுறை வந்து சென்றதற்காக சூர்யா அதிகப் பணத்தைச் செலவிட்டுள்ளார். அதனால், இழப்பீட்டுத் தொகை குறைவாக இருக்காது என நம்புகிறோம்,” என்று அவரது சார்பில் முன்னிலையாகும் இன்னொரு வழக்கறிஞர் சைஃபுல்லா அஸ்மி கூறினார்.

