ஆழ்குழியில் விழுந்த இந்தியப் பெண்; மலேசியப் பிரதமர் புதிய உத்தரவு

1 mins read
8e71323e-9972-4bcc-bbd7-6c64c7fdab5b
ஆகஸ்ட் 23ஆம் தேதி எதிர்பாரா வகையில் திடீரென்று ஆழ்குழி ஏற்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 48 வயது விஜயலட்சுமி சிக்கிக்கொண்டார். - படம்: இபிஏ

கோலாலம்பூர்: கோலாலம்பூரின் மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் உள்ள சாலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதி எதிர்பாரா வகையில் திடீரென்று ஆழ்குழி ஏற்பட்டது. அதில் இந்தியாவைச் சேர்ந்த 48 வயது விஜயலட்சுமி சிக்கிக்கொண்டார்.

அவரை மீட்கும் பணிகள் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோலாலம்பூர் நகரமன்றம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் தங்களது அனுதாபத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.

போதிய முன்னேற்றம் இல்லாததால் சனிக்கிழமை இரவு தேடுதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 25) காலை மீட்பு பணி தொடங்கியது.

காவல்துறை உயரதிகாரிகளும் மீட்புப் பணியை மேற்பார்வையிட்டதாக மலேசிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மீட்புப் பணிக்காக அப்பகுதியில் 6 கால்வாய் ஆழ்குழிகள் கட்டங்கட்டமாக திறக்கப்பட்டுள்ளன.

எதனால் அங்கு திடீரென்று ஆழ்குழி ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக மலேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் ஸலிகா முஸ்தஃபா தெரிவித்தார்.

கோலாலம்பூர் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று திருவாட்டி ஸலிகா கூறினார்.

குறிப்புச் சொற்கள்