கோலாலம்பூர்: கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜீத் இந்தியா வட்டாரத்தில் உள்ள சாலையில் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று யாரும் எதிர்பாரா வகையில் திடீரென்று ஆழ்குழி ஏற்பட்டது.
அப்போது அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 48 வயது பெண், அந்த எட்டு மீட்டர் ஆழமுள்ள குழிக்குள் விழுந்து மாயமானார்.
அவரைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 9 மணிக்குத் தேடும் பணிகள் தொடர்ந்தன.
ஆனால் ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 9 மணி நிலவரப்படி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த திருவாட்டி விஜயலட்சுமியை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
அவரது செருப்பு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் ருஸ்டி முகம்மது ஈசா சம்பவ இடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் உள்ள குறைந்தது 10 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடைகள் மூடப்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குழிக்குள் விழுந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு மீட்புப் பணிகள் குறித்து தகவல்கள் அளிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்களது விசாவை நீட்டிப்பது குறித்து இந்தியத் தூதரகத்துடன் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தம் தாயாரைக் காப்பாற்றுமாறு சத்தம் போட்டு அழுதபடி, மீட்புப் பணியாளர்களிடம் குழிக்குள் விழுந்த பெண்ணின் மூத்த மகனான 26 வயது திரு சூர்யா மன்றாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
“இதற்காகவா என் அம்மாவை மலேசியாவுக்கு அழைத்து வந்தேன்? என் அம்மாவைக் காப்பாற்றி என்னிடம் கொடுங்கள்,” என்று அவர் கதறி அழுதார்.
அவருக்கு அவரது உறவினர்களும் நண்பர்களும் ஆறுதல் கூறினர்.
சம்பவ இடத்துக்கு அருகில், குழிக்குள் விழுந்த பெண்ணின் கணவரும் சில பெண்களும் அமர்ந்திருந்தனர்.
குழிக்குள் விழுந்த பெண்ணை மீட்க முடியுமா என்று கண்ணீர் மல்கும் கண்களுடன் அவர்கள் அதிகாரிகளைக் கேட்டனர்.
“நான் நடந்துகொண்டிருந்தேன். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் குழிக்குள் விழுந்து மாயமானார்,” என்று சம்பவம் நிகழ்ந்தபோது அங்கு இருந்த பெண் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, திருவாட்டி விஜயலட்சுமி விழுந்த ஆழ்குழிக்கு அருகில் உள்ள ஆறு சாக்கடை வாயிற்புழைகளிலும் தேடுதல் பணிகள் இடம்பெறுகின்றன.
ஜாலான் மலாயு, ஜாலான் மெர்டேக்கா ஆகிய இடங்களில் உள்ள சாக்கடை வாயிற்புழைகளும் அவற்றில் அடங்கும்.
ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் விஸ்மா யாக்கினுக்கு முன்னால் இருக்கும் சாக்கடை வாயிற்புழைக்குள் தீயணைப்பாளர் ஒருவர் இறங்கியதாகவும் ஆனால் திருவாட்டி விஜயலட்சுமியைக் காணவில்லை என்றும் டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவரான உதவி ஆணையர் சுலிஸ்மி சுலைமான் தெரிவித்தார்.
“ஜாலான் மலாயுவில் உள்ள சாக்கடை வாயிற்புழையில் தேடுதல் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. திருவாட்டி விஜயலட்சுமியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்,” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
மீட்புப் பணியாளர்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, சாக்கடை வாயிற்புழைகளில் இறங்கி நடத்தப்படும் தேடுதல் பணிகளைப் படிப்படியாகத்தான் நடத்த முடியும் என்றார் அவர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒவ்வொரு சாக்கடை வாயிற்புழையிலும் ஒரு தீயணைப்பாளரை மட்டுமே இறக்கிவிட முடியும் என்று திரு சுலிஸ்மி தெரிவித்தார்.