கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் இந்தியா வட்டாரத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று நடைபாதை திடீரென உள்வாங்கியது.
ஆழ்குழிக்குள் விழந்த இந்திய நாட்டவரான 48 வயது திருவாட்டி விஜயலட்சுமியைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
நடைபாதை உள்வாங்கியதில் நிலத்துக்கு அடியில் உள்ள கழிவுநீர்க் குழாய்கள் செல்லும் பாதைகளில் இடிபாடுகள் குவிந்துகிடப்பதாகவும் தேடுதல், மீட்புப் பணிகளுக்கு அவை இடையூறு விளைவிப்பதாகவும் டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவரான உதவி ஆணையர் சுலிஸ்மி சுலைமான் தெரிவித்தார்.
சக்திவாய்ந்த நீரோட்டம் காரணமாகப் பாதைகளும் கான்கிரீட் துண்டுகளும் மீட்புப் பணியாளர்களின் பாதையை அடைத்துக்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
இதற்குத் தீர்வு காணும் வகையில் சக்திவாய்ந்த நீர்பீய்ச்சுக் கருவிகளைப் பயன்படுத்தி இடிபாடுகளைச் சிதறடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக திரு சுலிஸ்மி தெரிவித்தார்.
“கழிவுநீர்க் குழாய்கள் செல்லும் பாதைகளை இடிபாடுகள் அடைத்துக்கொண்டிருப்பது கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இடிபாடுகளுக்குப் பின்னால் ஏதோ ஒன்று இருப்பதாக உணர்கிறோம். சக்திவாய்ந்த நீர்பீய்ச்சுக் கருவிகளைப் பயன்படுத்தி பாதைகளை அடைத்துக்கொண்டிருக்கும் இடிபாடுகளைச் சிதறடித்துவிடலாம். அவை அனைத்தையும் வெளியே கொண்டு வந்துவிடலாம். ஆழ்குழிக்குள் விழுந்த பெண் இறந்திருந்து, அவரது சடலம் அங்கு இருந்தால் அதனை வெளியே கொண்டு வந்துவிட முடியும். ஆனால் அப்பெண்ணின் இருப்பிடம் இதுவரை தெரியவில்லை,” என்று திரு சுலிஸ்மி கூறினார்.
மழை பெய்தால் திறந்துகிடக்கும் எட்டு மீட்டர் ஆழ்குழி வாயிலாகச் செல்லும் மழைநீர், தேடி மீட்கும் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க நிலத்துக்கு அடியில் உள்ள கழிவுநீர்க் குழாய்ப் பாதைகளைச் சுற்றி 100க்கும் அதிகமான மணல்மூட்டைகளை கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் போட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பந்தாய் டாலாம் பகுதியில் உள்ள இன்டா கழிவுநீர் ஆலை அருகில் தேடுதல் பணிகள் தொடர்வதாக திரு சுலிஸ்மி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஆழ்குழிக்குள் விழுந்து மாயமான திருவாட்டி விஜயலட்சுமியின் குடும்பத்தாருக்குத் தேவையான உதவி வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
அவர்களுடன் எந்நேரமும் இருந்து அவர்களுக்கு உதவி புரிய மனநல ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஆழ்குழிக்குள் விழந்த பெண்ணின் குடும்பத்தினர் கடுமையான மனவேதனையால் வாடி வதங்கியுள்ளனர். ஆனால், திருவாட்டி விஜயலட்சுமி இறந்துபோயிருப்பதற்கான சாத்தியம் அதிகம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவரது முகத்தையாவது தங்களிடம் காட்டிவிடும்படி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். தேடுதல் பணியில் மலேசிய அரசாங்கம் முழுக் கடப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக அவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரியான திரு அரவிந்த் அப்பளசாமி கூறினார்.

