துபாய்: துபாயில் புதன்கிழமையன்று (ஜூலை 24) இடம்பெற்ற பரிசுச்சீட்டுக் குலுக்கலில் துபாய் தொழிலதிபர் ஒருவருக்கும் இந்தியர் ஒருவருக்கும் தலா 1 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு விழுந்தது.
சயீத் முகம்மது யூசுஃப், 47, என்ற துபாய் தொழிலதிபர் கடந்த ஐந்தாண்டுகளாக ‘துபாய் டூட்டி ஃபிரீ மில்லேனியம் மில்லியனர்’ என்ற அந்தக் குலுக்கலுக்கான பரிசுச்சீட்டுகளைத் தவறாது வாங்கி வந்தார்.
அவருடன், விதி குர்னானி என்ற இந்தியப் பெண்ணுக்கும் ஒரு மில்லியன் டாலர் பரிசு கிடைத்துள்ளது. அவர் ஜூலை 9ஆம் தேதி துபாய் அனைத்துலக விமான நிலையத்தில் மும்பைக்குப் பறந்தபோது அப்பரிசுச்சீட்டை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவரை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறப்பட்டது. ஆனாலும், தகவல் தெரியவரும்போதும் அவர் மகிழ்ச்சியில் திளைப்பார் என்பதில் ஐயமில்லை.
அதனைத் தொடர்ந்து நடந்த ‘ஃபைனஸ்ட் டிரா’ குலுக்கலிலும் நால்வருக்கு விலையுயர்ந்த சொகுசு வாகனங்கள் பரிசாகக் கிடைத்தன.
அவர்களில் இந்தியாவைச் சேர்ந்த 48 வயது மகேஷ் பிரபாகரனும் 53 வயது ஹமீத் அம்மச்சீத்துவலப்பில்லும் அடங்குவர்.
அவ்விருவருக்கும் பிஎம்டபிள்யூ கார் பரிசாகக் கிடைத்தது.