இஸ்ரேல்: இஸ்ரேலுக்குச் செல்ல பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலியக் கட்டுமானத் துறையில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது.
ஹமாஸ் போராளிகள் 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டது.
ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க இஸ்ரேலிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த கட்டுமான ஊழியர்கள் இஸ்ரேலில் பணியாற்றுகின்றனர்.
ஒருபுறம் காஸா எல்லையில் நிகழும் போர், மறுபுறம் லெபனானில் ஹிஸ்புல்லா படையினருடனும் ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுடனும் மோதல் என இஸ்ரேலில் சிரமமான சூழல் நிலவினாலும் அதனால் பின்வாங்கவில்லை இந்திய ஊழியர்கள்.
எச்சரிக்கை ஒலி கேட்கும்போதெல்லாம் பாதுகாப்பான இடம் தேடி ஓடும் நிலையிலும், பயம் ஏதுமில்லை என்கின்றனர் இவர்களில் சிலர்.
இந்தியாவில் கிடைப்பதைப்போல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு சம்பளம் என்பது இவர்களை ஈர்த்துள்ளது.
ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வேலை செய்ய நேர்ந்தாலும் வருங்காலத்திற்குப் பணம் சேர்க்கவும் முதலீடுகளைத் திட்டமிடவும் குடும்பத்தின் நலன் கருதியும் இவர்கள் துணிச்சலுடன் வேலைக்காக இஸ்ரேல் சென்றுள்ளனர்.
இவர்களைப்போல் ஏறக்குறைய 16,000 பேர் கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்குச் சென்றுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரை வேலையில் சேர்க்க இஸ்ரேல் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.