மும்பை / லண்டன்: உலகின் மிகப் பெரிய தங்கச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் நாற்பது ஆண்டுகள் காணாத அளவு தங்க விலை உயர்ந்துவிட்டதால் மக்கள் ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்க்கின்றனர்.
அதற்குப் பதிலாக தங்கக் காசுகள், கட்டிகள் போன்றவற்றை இந்தியர்கள் ஒரு முதலீடாகக் கருதி அவற்றின்மீது கவனம் செலுத்துகின்றனர்.
பண்டிகை காலத்தில் ஒரு சிறுதளவாவது தங்க நகை வாங்கும் வழக்கம் உள்ள இந்துக்கள், செய்கூலி போன்ற கூடுதல் கட்டணங்களத் தவிர்த்து காசு அல்லது கட்டி வடிவங்களில் அவற்றைப் பெறுகின்றனர்.
சிறந்த முதலீடாக கருதப்படும் தங்கத்தின் விலை, அமெரிக்க வட்டி விகிதமும் டாலர் மதிப்பும் குறைந்ததால் 2025ஆம் ஆண்டில் உலகமெங்கும் 67 விழுக்காடு உயர்ந்துள்ளது.
இவ்வாண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 5 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததும் இந்தியாவில் தங்க விலைகள் 77விழுக்காடு உயர்ந்ததன் காரணம்.
மேலும் தங்கம் வெள்ளி போன்றவற்றின் விலைகள் ஏறுமுகமாகவே இருக்கும் என்பதால், உலக அளவில் மக்கள் ஆபரணத் தங்கத்தைத் தவிர்க்கும் போக்கு 2026ஆம் ஆண்டிலும் தொடரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இருப்பினும் ஒருசில இந்திய வாடிக்கையாளர்கள் ஆபரணத் தங்கத்தை சிறிய அளவில் வாங்க முடிவெடுத்துள்ளனர். அதற்கேற்ப நகைக் கடைக்காரர்கள் வடிவங்களை அமைக்கின்றனர்.
இந்தியாவின் மொத்த தங்கக் கொள்முதல் 2025ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 14 விழுக்காடும், ஆபரணத் தங்கத்தின் பயன்பாடு 26 விழுக்காடும் குறைந்துள்ளன. இருப்பினும் தங்க முதலீடுகள் 13 விழுக்காடு உயர்ந்து 185 டன் எடையை எட்டியுள்ளது என்று உலகத் தங்க அமைப்பு (WGC) தகவல் வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தங்கத்தை மூலதனமாகக் கொண்டு 2025ஆம் ஆண்டில் இந்தியாவில் 28.7 டன் தங்கத்துக்கு ஈடாக நிதிப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. அதன் மொத்த மதிப்பு S$ 4.2 பில்லியன் (US$3.3 பில்லியன்) ஆகும். அதன்படி இந்திய வர்த்தகர்களிடம் 86.2 டன் தங்க இருப்புகள் உள்ளது என்று உலகத் தங்க அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

