பிரிக்ஃபீல்ட்ஸ்: கோலாலம்பூரின் அரசாங்க விவகாரங்களில் இந்தியர்களையும் கலந்து ஆலோசிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று பிரதமர் அலுவலக அமைச்சரான ஹன்னா இயோ தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர் மாநகர மன்ற ஆலோசனைக் குழுவில் இந்தியர்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து தமக்குத் தகவல் வந்திருப்பதாக அவர் சொன்னார்.
“தற்போதுள்ள மன்ற உறுப்பினர்கள் நான் அமைச்சராவதற்கு முன்பு நியமிக்கப்பட்டவர்கள்,” என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.
“ஆலோசனைக் குழுவில் இந்தியர்களின் பிரதிநிதித்துவத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து ஆராயப்படும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கோலாலம்பூர் பிரிக்ஃபீல்ட்சில் உள்ள ஜாலான் துன் சம்பந்தனில் சனிக்கிழமை (ஏப்ரல் 18) நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியை 35 அரசாங்க சார்பற்ற அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இதற்கு பிரிக்ஃபீல்ட்சின் உள்ளூர்ச் சமூகங்கள் ஆதரவளித்தன.
சிட்டி ஹால் என்றழைக்கப்படும் கோலாலம்பூர் மாநகர ஆலோசனைக் குழு, மேயரின் உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் பல முறை கூடி ஆலோசனை நடத்துகிறது. இதன் உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுகின்றனர்.
இந்தியச் சமூகத்தின் நலன்கள் குறித்து ஆராய உதவியாளர் ஒருவரை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் இயோ தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியர்களின் கவலைகளைப் புரிந்துகொள்ள கடந்த பத்து நாட்களாக பிரிக்ஃபீல்ட்ஸில் உள்ள இந்தியச் சமூகத்துடன் அவர் உரையாடி வருகிறார்.
“இந்தியச் சமூகத்தின் அக்கறையை கவனிக்க ஓர் இந்தியராக இருக்க வேண்டிய அவசியமில்லை. இரண்டு இந்தியப் பெண் குழந்தைகளின் தாயாக நான் இதைக் கூறுகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

