வாஷிங்டன்: அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இரண்டு இஸ்ரேலியத் தூதரக ஊழியர்களைச் சுட்டுக்கொன்ற ஆடவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இலியாஸ் ரோட்ரிகஸ் என்ற அந்த 30 வயது ஆடவர் மே 21ஆம் தேதி இரவு இளம் அரசதந்திரிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இஸ்ரேலுக்கு உதவும் வகையிலும் யூதர் எதிர்ப்புக்கு எதிராகவும் அந்த நிகழ்ச்சி நடந்தது.
துப்பாக்கிச்சூட்டில் இஸ்ரேலின் யரோன் லிஸ்சின்கி, 31, சாரா லின் மில்கிரிம், 26, மாண்டனர். அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட ரோட்ரிகஸ், “இந்தத் துப்பாக்கிச்சூட்டை பாலஸ்தீனத்திற்காகவும் காஸாவுக்காகவும் செய்தேன்,” என்று கூறியதாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடவர்மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகளுடன் வெளிநாட்டு அதிகாரிகளைக் கொன்றது, ஆயுதம் கொண்டு கொலை செய்தது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
ரோட்ரிகஸ் கைது செய்யப்படும்போது “பாலஸ்தீனத்திற்குச் சுதந்திரம்,” என்று முழக்கமிட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே உலக நாடுகளில் உள்ள இஸ்ரேலியத் தூதரகங்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

