புத்ராஜெயா: தமது இளைய மகள் பிரசன்னா தீக்ஷாவைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக மலேசியக் காவல்துறை மற்றும் மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக எம். இந்திரா காந்தி தொடர்ந்த 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழக்கைப் புதுப்பிக்கக் கோரி மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) தள்ளுபடி செய்தது. திருவாட்டி இந்திரா காந்தி இந்து சமயத்தைச் சேர்ந்த மலேசியர்.
தலைமறைவாக உள்ள அவரது முன்னாள் கணவர் கே. பத்மநாபன் (முகம்மது ரிதுவான் அப்துல்லா என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையை நிறைவேற்றுவது தொடர்பான காவல்துறை ஆவணப் பதிவுகளில் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நிலையிலும், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
ஒருமனதாக எடுக்கப்பட்ட இத்தீர்ப்பை வாசித்த நீதிபதி ஃபைஸா ஜமாலுதீன், காவல்துறை செய்த குறிப்பிட்ட தவறுதான் பத்மநாபனின் கைதையோ அல்லது சிறுமி பிரசன்னாவை மீட்பதையோ நேரடியாகத் தடுத்தது என்பதை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறினார்.
எதிர்மனுதாரர்களின் நடவடிக்கையின்மையே தனது இழப்புக்கு நேரடிக் காரணம் என்பதையும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அந்த இழப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என்பதையும் மேல்முறையீட்டாளர் நிரூபிக்க வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
நிர்வாகக் குறைபாடுகளுக்காக மட்டும் தனிநபர் சட்டத்தின்கீழ் இழப்பீடு வழங்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, “தனிநபர் சட்ட இழப்பீடு என்பது சட்டவிரோதச் செயலினால் ஏற்படும் இழப்பீட்டுக்கே வழங்கப்படும். அது திருப்திகரமற்ற நிர்வாகச் செயல்பாட்டிற்கான ஒரு தனிப்பட்ட தீர்வல்ல. சிறுமியை ஆரம்பத்தில் கடத்திச் சென்றதற்கோ அல்லது பிரித்ததற்கோ எதிர்மனுதாரர்கள் காரணம் அல்ல,” என்று கூறினார்.
குடிநுழைவுத் துறை பதிவுகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதி ஃபைஸா, பத்மநாபன் மலேசியாவிலிருந்து கடைசியாக வெளியேறியது 2014ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதியன்று பதவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மீண்டும் நாட்டுக்குள் எப்போது வந்தார் அல்லது நுழைந்தாரா என்பது குறித்து எந்தவொரு சட்டபூர்வ பதிவுகளும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அவர் பதிவு செய்யப்படாத வழிகள் மூலம் மீண்டும் மலேசியா வந்திருக்கலாம் அல்லது நாட்டிற்குள் இருந்திருக்கலாம் என்ற சாத்தியக்கூறு மட்டுமே சான்றாகாது என்றும் சாத்தியக்கூறுகள் மட்டுமே சான்றுகளின் சமநிலையை நிறைவு செய்ய முடியாது என்றும் அவர் விளக்கினார்.
இருப்பினும், கைது ஆணையை நிறைவேற்றுவது தொடர்பாக காவல்துறை சமர்ப்பித்த ஆதாரங்களில் உள்ள கடுமையான குறைபாடுகளை மேல்முறையீட்டு நீதிபதிகள் கண்டித்தனர்.
2020ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதியன்று இந்திரா காந்தி இந்த வழக்கைத் தொடுத்தார்.
2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருவாட்டி இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் பத்மநாபன் தமது மூன்று குழந்தைகளையும் தாயின் அனுமதியின்றி இஸ்லாமியச் சமயத்துக்கு மதமாற்றம் செய்த பிறகு, 11 மாதக் குழந்தையாக இருந்த பிரசன்னாவைக் கடத்திச் சென்றார். அதன்பின்னர், மகளை மீட்பதற்காக திருவாட்டி இந்திரா காந்தி நடத்தி வரும் 17 ஆண்டுகாலப் போராட்டத்தின் மற்றொரு கட்டமாக இவ்வழக்கு அமைந்தது.


