கோலாலம்பூர்: மலேசியரான இந்திரா காந்தியின் மகள் காணாமற்போனது குறித்த விசாரணையைக் காவல்துறை ஒருபோதும் நிறுத்தியதில்லை என மலேசியக் காவல்துறைத் தலைமை அதிகாரி முஹம்மது காலித் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
காவல்துறைக்கு எதிராக திருவாட்டி இந்திரா தாக்கல் செய்துள்ள மனு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவ்வாறு செய்ய அவருக்கு சட்டபூர்வ உரிமை உண்டு என்றார் திரு இஸ்மாயில்.
“இந்த வழக்கு நீண்டகாலமாக நடந்து வருகிறது. அவரையும் அவரது வழக்கறிஞரையும் சந்தித்துப் பேசி இருக்கிறேன். எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்துவோம்,” என்று அவர் வியாழக்கிழமை (மார்ச் 19) செய்தியாளர்களிடம் கூறினார்.
இதுவரை வழக்கில் புதிய முன்னேற்றம் எதுவுமில்லை என்றும் ஏதேனும் துப்பு கிடைத்தால் அதன் அடிப்படையில் விசாரணை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமது மகள் பிரசன்னா தீக்ஷா இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கத் தவறியதோடு இந்த விவகாரத்தில் தமது முன்னாள் கணவர் முகம்மது ரிதுவான் அப்துல்லாவைக் கைது செய்யத் தவறியதற்காகவும் காவல்துறைத் தலைமை அலுவலகத்திற்கு எதிராக திருவாட்டி இந்திரா காந்தி நீதிமன்ற அவமதிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மகள் யார் பராமரிப்பில் இருப்பது என்று பிரச்சினை நிலவிய வேளையில், 2009ஆம் ஆண்டு 11 மாதக் குழந்தையாக இருந்த பிரசன்னாவை முகம்மது ரிதுவான் கடத்திச் சென்றதாக இந்திரா காந்தி கூறி வருகிறார்.

