ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இவ்வாண்டு முற்பாதியில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் 32,389 பேர் வேலையிழந்துவிட்டனர்.
நாட்டின் உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள மந்தநிலையே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
மேற்கு ஜாவாவில் மட்டும் 6,727 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர் என்றும் இது நாட்டின் மொத்த ஆட்குறைப்பில் 20.77 விழுக்காடு என்றும் இந்தோனீசியாவின் மனிதவள அமைச்சு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
அதற்கு அடுத்தபடியாக, பான்டென் பகுதியில் 3,782 பேரும் கிழக்கு ஜாவா பகுதியில் 2,851 பேரும் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர்.
அரசாங்கத்தின் வேலையிழப்புக் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்துள்ள ஊழியர்களின் புள்ளிவிவரங்கள் மட்டுமே இதில் அடங்கும். தன்விருப்பத்தின் பேரில் விலகியவர்கள், ஓய்வுபெற்றவர்கள், உடற்குறையுள்ளோர் ஆகியோர் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை.
ஆகையால், பாதிக்கப்பட்ட ஊழியர்களின் உண்மையான எண்ணிக்கை அரசாங்கப் புள்ளிவிவரங்களைவிட அதிகமாக இருக்கும் என்று தொழிலாளர் நல ஆலோசகர் சையது இக்பால் கூறியுள்ளார்.
பல ஆட்குறைப்புச் சம்பவங்கள் அரசின் கணக்கில் பதிவாவது இல்லை என்று இந்தோனீசியத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவருமான அவர் சுட்டிக்காட்டினார்.
உலகளாவிய பொருளியல் மற்றும் நிலையற்ற அரசியல் சூழலால் ஆட்குறைப்பு அதிகரித்து வருகிறது. அதனை எதிர்கொள்ள அதிபர் பிரபோவோ சுபியாந்தோ சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளார்.
இந்நிலையில், தொழிற்சங்கங்களுக்கும் நிறுவன நிர்வாகத்திற்கும் இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்று மனிதவளத் துணை அமைச்சர் அஃப்ரியான்ஷா நூர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தோனீசிய மத்திய வங்கி ஆய்வறிக்கையின்படி, நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம் தொடர்ந்து சரிவைக் கண்டுவருகிறது. உற்பத்தித் துறைச் செயல்பாட்டைக் குறிக்கும் குறியீடு கடந்த மே மாதத்தில் 50 புள்ளிகளாக இருந்தது. ஆனால், ஜூன் மாதத்தில் அது 46.9 புள்ளிகளாகக் குறைந்தது.
உள்நாட்டுச் சந்தையில் மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. தொடர் விலையேற்றம் காரணமாகப் பொருள்களுக்கான தேவையும் முடங்கியுள்ளது. அனைத்துலகச் சந்தையில் இந்தோனீசியப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது.
இத்தகைய சூழலில், உலகளாவிய நெருக்கடிகள், அதிகரிக்கும் உற்பத்திச் செலவு, நாணய மதிப்புச் சரிவு ஆகிய சவால்களுக்கு இடையே உற்பத்தித் துறை நிறுவனங்கள் தொடர்ந்து கடும் அழுத்தத்தைச் சந்திக்கும் எனப் பொருளியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

