ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அக்டோபர் 1ஆம் தேதி அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார்.
முந்தைய நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலகி இரு வாரங்களான நிலையில் இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
வெளியுறவு அமைச்சராக இருந்த சுகியோனோவுக்குப் பதிலாக மூத்த தூதர் அர்மானதா கிறிஸ்டியாவான் நாசிர் புதிய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதிபர் மாளிகையில் அவர் பதவியேற்றார்.
அதேவேளையில், ஆளும் கெரிந்திரா கட்சியின் பொதுச் செயலாளரான சுகியோனோ, மனிதவள மேம்பாடு, கலாசார விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
உடனடியாக நடப்புக்கு வந்துள்ள இந்த அமைச்சரவை மாற்றத்தில் மொத்தம் 15 பதவிகள் அடங்கும்.
இதில் மூன்று ஒருங்கிணைப்பு அமைச்சர்கள், இரண்டு அமைச்சர்கள், ஐந்து துணை அமைச்சர்கள், நான்கு பிரிவுத் தலைவர்கள் அடங்குவர்.
தொழில்துறை அமைச்சராக முகமது சர்முஜி பதவியேற்றார். சுயூடி ஆரியோ செட்டோ புதிய காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மத்திய கிழக்குப் போரும், பிற புவிசார் அரசியல் பதற்றங்களும் பொருளியல் சவால்களை அதிகரித்துள்ள சூழலில் இந்த அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
