இந்தோனீசியா, ஆஸ்திரேலியா புதிய தற்காப்பு ஒப்பந்தம்

1 mins read
975ce4f0-ea94-4236-97e7-3c30732150bd
ஆஸ்திரேலிய நகரான சிட்னியில் புதன்கிழமை (நவம்பர் 12) இந்தோனீசிய அதிபரை பிரதமர் அந்தனி அல்பனீஸ் வரவேற்றார். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவும் இந்தோனீசியாவும் புதிய தற்காப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ள இணக்கம் கண்டுள்ளன.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஆஸ்திரேலியாவுக்கு புதன்கிழமை (12 நவம்பர்) அதிகாரபூர்வ வருகை தந்துள்ளார். சிட்னி நகரில் நடந்த வரவேற்புக்குப் பிறகு இருநாட்டுத் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீஸ் தற்காப்பு ஒப்பந்தம் பற்றி பேசினார்.

இருநாட்டுத் தற்காப்பு ஒப்பந்தம், 30 ஆண்டுகளுக்குமுன் கையெழுத்திடப்பட்ட ஒன்றின் மேம்படுத்தப்பட்ட நீட்சியாகும் என்றார். வழக்கமான பேச்சுவார்த்தைகளை உள்ளடக்குவதோடு, இருநாடுகளுக்கும் ஏதாவது அச்சுறுத்தல் ஏற்பட்டால் உடனடி ஒத்துழைப்புக்குத் தற்காப்பு ஒப்பந்தம் த்தரவாதம் அளிக்கும் என்று குறிப்பிட்டார்.

இருநாடுகளோ அல்லது ஒரு நாடோ தற்காப்புப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், எவ்வித நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை செய்ய ஒப்பந்தம் வகை செய்கிறது என்று பிரதமர் அல்பனீஸ் கூறினார்.

ஒன்றிணைந்து செயல்படுவதே இருநாடுகளின் தற்காப்புக்கும் உகந்தது. அமைதியும் நிலைத்தன்மையும் வட்டார அளவில் இதன்வழி உறுதிசெய்யப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

தற்காப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான ஒப்பந்தம் நெருக்கமான ஒத்துழைப்புக்கு வழிவகுப்பதாக இந்தோனீசிய அதிபர் பிரபோவோ கருத்துரைத்தார்.

இருநாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்த நல்லுறவைப் பேணவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்