ஜகார்த்தா: இந்தோனீசியாவின் குடிநுழைவு, திருத்தங்கள் அமைச்சு 154,785 சிறைக் கைதிகளுக்கும் 1,123 இளம் குற்றவாளிகளுக்கும் விதிக்கப்பட்டிருந்த தண்டனையைக் குறைத்துள்ளது.
நோன்புப் பெருநாளையொட்டி அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டதாக தி ஜகார்த்தா போஸ்ட் ஊடகம் தெரிவித்தது. தண்டனைக் குறைப்பின் அங்கமாக இந்தோனீசியக் குடிநுழைவு, திருத்தங்கள் அமைச்சு 1,142 சிறைக் கைதிகளையும் 19 இளம் குற்றவாளிகளையும் விடுவித்தது.
“குணத்தில் நல்ல மாற்றங்களை வெளிக்காட்டிய கைதிகள், மறுவாழ்வுத் திட்டங்களில் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்ற கைதிகள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் அரசாங்கம் அவர்களுக்கான தண்டனையைத் தளர்த்தியதுடன் சிறைக் காலத்தைக் குறைத்துள்ளது,” என்று குடிநுழைவு, திருத்தங்கள் அமைச்சின் திருத்தங்கள் சேவை தலைமை இயக்குநர் மஷுடி சனிக்கிழமை (மார்ச் 21) கூறியதாக டெட்டிக் ஊடகம் குறிப்பிட்டது.
“இந்தப் போக்கு, தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ளவும் சமூகத்துடன் மறுபடியும் இணையும் வகையில் தயார்ப்படுத்திக்கொள்ளவும் அவர்களை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்றும் அவர் சொன்னார்.
இந்நடவடிக்கை மூலம் அரசாங்கதின் வரவுசெலவுத் திட்டத்தில் 109.2 பில்லியன் ரூப்பியா (8.3 மில்லியன் வெள்ளி) சேமிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று திரு மஷுடி தெரிவித்தார். தாங்கள் எழுந்து நிற்க உதவும் திட்டங்களில் தொடர்ந்து பங்கேற்க ஊக்குவிக்கும் பங்கேற்கும் சிறைக்கைதிகளுக்கு அமைச்சு ஊக்கத்தொகை வழங்கி வருவதாகவும் அமைச்சு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மிகச் சிறிய, சிறிய, நடுத்தர நிறுவனப் (எம்எஸ்எம்இ) பயிலரங்குகள், உணவுத் தன்னிறைவுத் திட்டங்கள் அவற்றில் அடங்கும்.
“இந்தோனீசியா முழுவதும் உள்ள வட்டார அலுவலகங்கள், சிறைச்சேவை, சிறைச்சாலைகள் ஆகியவை ஒன்றாக இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தண்டனைக் குறைப்பு, சிறைக் காலக் குறைப்பு ஆகியவற்றை வழங்குவதும் அனுகூலங்கள், சமூக உதவி ஆகியவற்றை அளிப்பதும் நடவடிக்கையில் அடங்கும்,” என்றார் அவர்.
மேற்கு ஜாவா மாநிலத்தில்தான் ஆக அதிகமானோருக்குத் தண்டனை குறைக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் இவ்வாண்டு மொத்தம் 18,335 பேரின் தண்டனை குறைக்கப்பட்டது.
அதற்கு அடுத்த நிலையில் வட சுமத்திரா மாநிலத்தில் 15,621 பேரின் தண்டனை குறைக்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக கிழக்கு ஜாவாவில் இந்த எண்ணிக்கை 14,244ஆகப் பதிவானது.

