ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், உள்ளூர் நீதிமன்றம் ஒன்றின் தலைமை நீதிபதியைக் கைது செய்துள்ளது.
ஏற்றுமதி அனுமதி பெற்றதன் தொடர்பிலான ஊழல் வழக்கிலிருந்து மூன்று பனை எண்ணெய் நிறுவனங்கள் விடுவிக்கப்பட்டன. அதன் தொடர்பில் அந்தத் தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வில்மார் குழுமம், முசிம் மாஸ் குழுமம், வட சுமத்ராவில் இயங்கும் பெர்மாத்தா ஹிஜாவ் குழுமம் ஆகிய மூன்று நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு ஏற்றுமதி அனுமதி பெற்றதன் தொடர்பிலான முறைகேடுகளில் ஈடுபட்டதாக அவற்றின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் இருவர், தென் ஜகார்த்தா மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முகம்மது அரிஃப் நுர்யாந்தாவுக்கு லஞ்சமாக 60 பில்லியன் ருப்பியா (4.7 மில்லியன் வெள்ளி) கொடுத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் பேச்சாளர் ஹர்லி சிரேகர் தெரிவித்தார். சாதகமான தீர்ப்பைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.