தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவில் இரண்டு டன் போதைப்பொருள் பறிமுதல்

1 mins read
e589b886-6e26-4ce4-9f77-b8fbc1bda8c1
கப்பலில் இருந்த நான்கு இந்தோனீசியர்களும் இரண்டு தாய்லாந்து நாட்டவரும் கைது செய்யப்பட்டனர். - படம்: பிக்சாபே

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிகாரிகள் இரண்டு டன் மெத்தம்ஃபெட்டமின் போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தோனீசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் இருந்த கப்பலில் அந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தத் தகவலை இந்தோனீசியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு திங்கட்கிழமை (மே 26) வெளியிட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கோல்டன் டிரையாங்கலுடன் தொடர்புடையது என்று அதிகாரிகள் கூறினர்.

வடகிழக்கு மியன்மார், தாய்லாந்து, லாவோஸ் ஆகிய இடங்கள் சந்திக்கும் இடமே கோல்டன் டிரையாங்கல். அப்பகுதியில் நீண்டகாலமாகவே போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது.

அங்கிருந்து ஜப்பான், நியூசிலாந்து போன்ற நாடுகளுக்குப் போதைப்பொருள் கடத்தப்படுகிறது.

சீ டிராகன் டராவா எனும் அந்தக் கப்பலை கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகக் கண்காணித்து வந்ததாக இந்தோனீசியப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் தலைவர் மார்ட்டினஸ் ஹுக்கும் கூறினார்.

கடந்த வாரம், அந்தக் கப்பலை நிறுத்திச் சோதனையிட அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

கப்பலில் பெட்டிகள் நிறைய போதைப்பொருள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கப்பலில் இருந்த இந்தோனீசியர் நால்வரும் தாய்லாந்து நாட்டவர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்