சூராகர்த்தா: ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பைக் கலைக்க ஆதரவு தெரிவித்துள்ள அதன் முன்னாள் உறுப்பினர்களின் சிறைத் தண்டனைக் காலத்தைக் குறைப்பது தொடர்பாக இந்தோனீசியா பரிசீலனை செய்து வருகிறது.
ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களில் 180க்கும் மேற்பட்டோரின் தண்டனைக்காலத்தைக் குறைக்க பரிந்துரை செய்யத் திட்டமிட்டுள்ளதாக இந்தோனீசியாவின் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் தலைவர் எடி ஹார்டோனோ தெரிவித்தார்.
“பல்வேறு சமயத்தினருடன் ஒற்றுமையாக வாழும் அணுகுமுறைக்கு மரியாதை தந்து, நல்ல குடிமக்களாகவும் முன்மாதிரியாகவும் வாழ முன்னாள் ஜமாஆ இஸ்லாமியா உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று டிசம்பர் 21ஆம் தேதி தலைமை ஆணையர் எடி கூறினார்.
சூராகர்த்தாவில் நடைபெற்ற நிகழ்வில் அவர் கலந்துகொண்டு இதுகுறித்து பேசினார்.
அந்த நிகழ்வில் ஏறத்தாழ 8,000 ஜமாஆ இஸ்லாமியா முன்னாள் உறுப்பினர்கள் தீவிரவாதப் போக்கைக் கைவிடுவதாக உறுதியளித்தனர்.
ஜமாஆ இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பு 1993ல் அமைக்கப்பட்டது.
அது, இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பான அல் கய்தாவுடன் தொடர்புடையது.
2002ல் பாலித் தீவில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலை ஜமாஆ இஸ்லாமியா நடத்தியது.
தொடர்புடைய செய்திகள்
அந்தத் தாக்குதலில் பலர் மாண்டனர்.
ஜமாஆ இஸ்லாமியாவின் மற்ற உறுப்பினர்கள் மனம் மாறி தீவிரவாத கொள்கைகளைக் கைவிடவைத்ததில் அந்த அமைப்பின் முன்னாள் மூத்த தலைவர்களான அபு ருஸ்டானும் பாரா விஜயந்தோவும் பேரளவில் பங்காற்றியதாக திரு எடி புகழாரம் சூட்டினார்.
அந்த இருவரும் தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாக அவர் கூறினார்.
ஆனால் அவர்கள் பரோலில் வெளியே வர விண்ணப்பம் செய்யும்போது அதுகுறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார் திரு எடி.
இந்தோனீசியச் சட்டத்தின்கீழ், விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையில் மூன்றில் இரு பங்குகளைப் பூர்த்தி செய்தவர்கள் பரோலில் வெளிவர விண்ணப்பிக்கலாம்.
இந்தோனீசியாவின் தேசிய பயங்கரவாத தடுப்பு ஆணையத்தின் உதவியோடு பாராவும் ருஸ்டானும் தங்கள் சிறை அறையிலிருந்து காணொளி மூலம் ஜமாஆ இஸ்லாமியாவின் முன்னாள் உறுப்பினர்களுடன் பேசி அவர்களை மனம் மாற வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.