ஜகார்த்தா: மத்திய கிழக்கு போர் மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க, இந்தோனீசியா தனது பள்ளிகளில் வழங்கப்படும் இலவச உணவுத் திட்டத்தைக் குறைத்துள்ளது.
இது செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஏறத்தாழ 60 மில்லியன் சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உணவளிக்கும் இத்திட்டம், அந்நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கு செலவைக் கொண்டது. இது அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் மிக முக்கியமான திட்டமாகும்.
வார இறுதியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் வாரத்துக்கு ஆறு நாள்கள் வழங்கப்பட்டு வந்த உணவை, செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) முதல் ஐந்து நாள்களாகக் குறைக்க அதிபர் பிரபோவோவும் அமைச்சர்களும் முடிவெடுத்தனர்.
இருப்பினும், ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக உள்ள பகுதிகளில், சனிக்கிழமைகளிலும் உணவு வழங்கப்படும். தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய பொருளியலான இந்தோனீசியாவில் சனிக்கிழமைகளிலும் பல பள்ளிகள் இயங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையின் மூலம் கிட்டத்தட்ட 40 டிரில்லியன் ருப்பியா (2.3 பில்லியன் அமெரிக்க டாலர்) சேமிக்கப்படும் என்று இந்தோனீசியாவின் தேசிய ஊட்டச்சத்து அமைப்பின் துணைத் தலைவர் நானிக் சுடர்யாதி டேயாங் தெரிவித்தார்.
சூழ்நிலை மாறினால், இந்த உணவு வழங்கும் நாள் குறைப்பு குறித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
284 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தோனீசியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் வளர்ச்சி குன்றுதல் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இறுதியில், 83 மில்லியன் மக்களுக்கு உணவளிப்பதை இலக்காகக் கொண்ட இத்திட்டம், அண்மையில் ஆயிரக்கணக்கானோருக்கு நச்சுணவுப் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

