இந்தோனீசிய இல்லங்களுக்கு விடிவுகாலம்: துருப்பிடிக்கும் கூரைகளுக்கு முடிவுகட்ட அதிபர் முடிவு

இந்தோனீசிய இல்லங்களுக்கு விடிவுகாலம்: துருப்பிடிக்கும் கூரைகளுக்கு முடிவுகட்ட அதிபர் முடிவு

2 mins read
18b1e7ee-5753-4cf5-86e3-b189daf33b07
இந்தோனீசியாவில் உள்ள வீடுகளில் வேயப்பட்டு இருக்கும் இரும்பு துத்தநாகக் கூரைகள் எல்லாம் விரைவில் மாற்றப்பட்டு, அதற்கு மாற்றாக களிமண் ஓடுகளால் கூரைகள் வேயப்படும் என்று அறிவித்துள்ளார் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ. - கோப்புப் படம்: தி ஜகார்த்தா போஸ்ட்

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் உள்ள வீடுகளில் வேயப்பட்டு இருக்கும் இரும்பு துத்தநாகக் கூரைகள் எல்லாம் விரைவில் மாற்றப்பட்டு, அதற்கு மாற்றாக களிமண் ஓடுகளால் கூரைகள் வேயப்படும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார் அந்நாட்டு அதிபர்  பிரபோவோ சுபியாந்தோ.

இந்த மாற்றம் தேவைப்படும் ஒவ்வொரு வீட்டிலும் அடுத்த மூன்றாண்டுகளுக்குள்ளாக இத்திட்டம் சிறப்பாக செயல்வடிவம் பெறும் என்று கூறியுள்ளார் அதிபர். அத்திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

எனினும், எதற்காக இத்திட்டத்தை விரைந்துமுடிக்க திரு பிரபோவோ அவசரம் காட்டுகிறார் என்று அரசியல் கொள்கை விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தோனீசிய அதிபர் இம்மாதத் தொடக்கத்தில் இத்திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மீண்டும் தற்போது இதுகுறித்து அவர் பேசியுள்ளார்.

அதிபரின் திட்டம் குறித்து கருத்துரைத்துள்ள உள்ளூர்வாசிகள், ‘‘வீடுகளுக்கு மண் ஓடுகளை இலவசமாக வேய்ந்து கொடுத்தால், கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். இது வீட்டையே மறு சீரமைப்பு செய்வது போன்றது,’’ என்று கூறியுள்ளனர்.

நாட்டு மக்களுக்கான இத்திட்டம் வடிவமைக்கப்பட்டதன் நோக்கம் குறித்துப் பேசிய அதிபர்,  “எல்லா நகரங்களிலும், கிட்டத்தட்ட எல்லாக் கிராமங்களிலும்,  துத்தநாகக் கூரைகள் இருப்பதைப் பார்க்கிறேன்.

‘‘இவ்வகை மேற்பூச்சுகளைக் கொண்ட வீடு குடியிருப்பாளர்களுக்கு அதிக  வெப்பமாக இருக்கும். மேலும், இரும்பில் துத்தநாகப் பூச்சுகளைக் கொண்ட அந்தக் கூரைகள் துருப்பிடிக்கவும் செய்கிறது.

‘‘இப்படிப்பட்ட கூரைகளால் இல்லங்கள் அமைக்கப்பட்டிருந்தால் இந்தோனீசியா அழகாக இருக்காது,” என்று கூறினார்.

இந்தோனீசியாவில் உள்ள அனைத்து துத்தநாகக் கூரைகளையும் மாற்றும் திட்டம் இந்தோனீசிய மொழியில் “gentengisasi” என்று அழைக்கப்படும். 

துருப்பிடித்த துத்தநாகக் கூரைகளை ஓடுகளால் மாற்றுவது நிலப்பரப்பை மிகவும் சீராகவும் சுத்தமாகவும் மாற்றும்; இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளை நாடு பேரளவில் ஈர்க்கும் என்று அதிபர் பிரபோவோ நம்பிக்கை தெரிவித்தார்.

‘‘துருப்பிடித்த கூரைகளைப் பார்க்க வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஏன் வரப்போகிறார்கள்? துரு என்பது சிதைவின் சின்னம்,’’ என்று குறிப்பிட்ட அவர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இந்தோனீசியா இனி துருப்பிடித்திருக்காது என்று தாம் எண்ணுவதாகவும் சொன்னார்.

இந்தோனீசியா உயர்ந்து வருகிறது. அது வலுவாக இருக்க வேண்டும்,” என்று மேலும் வலியுறுத்தினார் அதிபர்.

குறிப்புச் சொற்கள்