தேர்தல் சட்டத்தில் மாற்றம்: ஒப்புதலைப் பெற்றது இந்தோனீசியத் தேர்தல் ஆணையம்

1 mins read
845fac5b-88e2-4c95-b2a1-384be6e1cd1e
இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் (வலது) அக்டோபரில் அதிபர் பதவி ஏற்கவுள்ள பிரபோவோ சுபியாந்தோ. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவின் ஆட்சிக்காலம் அக்டோபர் 20ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கும் வேளையில், அவரின் பங்காளிகள் தங்களுக்குச் சாதகமாக தேர்தல் வேட்பாளருக்கான தகுதிகளை மாற்ற முயல்வது குறித்து பொங்கி எழுந்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

தேர்தல் சட்டத்தில் மாற்றம் தேவை என்று அவர்கள் குரல்கொடுத்ததை அடுத்து இந்தோனீசியாவின் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இந்தோனீசியாவின் பல நகரங்களில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இந்தோனீசியாவின் அடுத்த அதிபராக பிரபோவோ சுபியாந்தோ அக்டோபரில் பதவி ஏற்க இருக்கும் நிலையில் விடோடோ தமது நிர்வாகத்தின் ஆற்றலை மேலும் வலுவாக்க முயன்று வருகிறார் என்று விமர்சகர்கள் கூறினர்.

இந்நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதி எடுத்த முடிவின் அடிப்படையில் புதிய தேர்தல் சட்டங்கள் அமையவுள்ளன. இதன்படி, வேட்புமனுத் தாக்கல் செய்யும்போது வேட்பாளர்களுக்குக் குறைந்தபட்சம் 30 வயது இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

வட்டாரத் தேர்தல் சட்டங்களை மறுபரிசீலனை செய்யக் கடந்த ஆண்டின் பிற்பாதியில் நாடாளுமன்றம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. இருப்பினும் அரசியலமைப்பு நீதிமன்றம் எடுத்த முடிவை அடுத்து இதனைத் துரிதப்படுத்தத் தீர்மானித்தது.

இந்தக் கொள்கை மாற்றத்தால் பிரபோவோவின் அதிபர் தேர்தல் எதிராளி அனிஸ் பஸ்வெடான் ஜகார்த்தா ஆளுநர் ஆவதற்கு நியமனம் செய்யப்படலாம். இருப்பினும், அதேவேளை ஜோக்கோவியின் 29 வயது மகனான கேசாங் பங்காரேப் வட்டாரத் தேர்தல்களில் நிற்க இயலாமல் போகக்கூடும்.

குறிப்புச் சொற்கள்