ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தொடர்பு, மின்னிலக்க அமைச்சு, அந்நாட்டின் மின்னிலக்கத் தளத்தில் குழந்தைப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்கத் தவறும் சமூக ஊடகத் தளங்களுக்கான அபராதக் கொள்கைகளின் வரைவை நிறைவு செய்துள்ளது.
அபராதம் முதல் முழுமையான தடை வரை அவற்றில் அடங்கும். அந்த விதிமுறை கடந்த மார்ச் மாதம் அமலுக்கு வந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு இணக்கத்தை ஆய்வு செய்த தொடர்பு, மின்னிலக்க அமைச்சர் மியூத்தியா ஹாஃபிட், மெட்டாவின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், த்ரெட்ஸ், ஆல்ஃபபெட்டின் யூடியூப், பைட்டான்சின் டிக்டாக் உள்ளிட்ட தளங்கள் இன்னும் அவற்றின் கடமைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார்.
டிசம்பர் 31 சுய மதிப்பீட்டுக் காலக்கெடுவிற்குள் விதிகளைப் பின்பற்றுமாறு அவர் அவற்றை வலியுறுத்தினார். ஆண்டு இறுதிக்குள் தளங்கள் தங்கள் சுய மதிப்பீடுகளை முடிக்கத் தவறினால், அரசாங்கம் தலையிட்டுச் சொந்தமாக மதிப்பீடுகளை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
விதிமுறைகளை மீறும் மின்னிலக்கத் தளங்களுக்கான அபராதங்களையும் அரசாங்கம் உறுதிசெய்துள்ளது. பெரிய அளவிலான அல்லது உலகளாவிய தளங்களுக்கு, அபராதம் அவற்றின் உலகளாவிய வருவாயில் 6 விழுக்காடு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உள்நாட்டு மின்னணு முறை வழங்குநர்களுக்கான தண்டனை அவர்களின் வணிகத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சிறிய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 1 பில்லியன் ரூப்பியா (S$72,000), நடுத்தர நிறுவனங்களுக்கு 10 பில்லியன் ரூப்பியா அபராதம் விதிக்கப்படும்.
“இந்த அபராதங்கள் பொதுமக்கள் கலந்தாலோசனைக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நாங்கள் உள்நாட்டு மின்னணு முறை வழங்குநர்களுக்கு, குறிப்பாக எட்டு நிறுவனங்களுக்கு அதிகாரபூர்வமாக இதுபற்றித் தெரிவித்துள்ளோம். மேலும், இதை நிதி அமைச்சிடம் ஒப்படைத்துள்ளோம்,” என்று செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மியூத்தியா கூறினார்.
