ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளால் அரசாங்க அலுவலர்கள் சிரமப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அலுவலகங்களில் மின்விளக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன. மின்தூக்கிகள் வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது.
தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள அரசாங்க அலுவலகங்கள் பலவற்றிலும் வேலை நேரம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தவுடன் உடனடியாக குளிரூட்டிகளும் மின்விளக்குகளும் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
வேலையை முடிப்பதற்காகப் பணி நேரத்துக்கு அப்பாலும் தொடர்ந்து வேலைசெய்வோர் மங்கலான வெளிச்சத்தில் வேலை செய்ய நேரிட்டுள்ளது.
எரிசக்திக் கட்டணத்தைச் சேமிக்கும் வகையில் வீட்டிலிருந்து வேலை செய்யும்படி ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஜனவரி மாதப் பிற்பகுதியில் திரு பிரபோவோ 306.7 டிரில்லியன் ரூப்பியாவைச் சேமிக்கும் வகையில் செலவுக் குறைப்பை அறிவித்தார்.
அமைச்சுகளுக்கான அலுவலகச் செலவுகள், நிகழ்ச்சிகள், பணி நிமித்தமான பயணங்கள் ஆகியவை தொடர்பான செலவுகளைக் குறைக்க அவர் உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கை, 4.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு நிதியை மாற்றிவிடுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தொடர்புடைய செய்திகள்
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசிய 35 வயது அரசாங்க அலுவலர் ஒருவர், அலுவலகத்தில் தனது அறையைத் தவிர மற்ற இடங்கள் இருள் சூழ்ந்திருந்ததையும் சத்தம் ஏதும் இல்லாமல் மாறுபட்ட சூழல் நிலவியதையும் விளக்கினார்.
ஊழியர்கள் நேரத்தோடு அலுவலகத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டதால் சுற்றுக்காவல் பணியில் உள்ளோர், வேலை நேரத்துப் பிறகு தங்கள் மின்னிலக்கக் கருவிகளை நிறுத்திவைப்பதாகக் கூறப்பட்டது.
முன்னாள் ராணுவ அதிகாரியான திரு பிரபோவோ கடந்த அக்டோபர் மாதம் இந்தோனீசியாவின் அதிபராகப் பொறுப்பேற்றார். அரசாங்கச் செலவுகளைக் குறைப்பதன் வாயிலாகவும் அரசாங்க நிறுவனங்களின் லாப ஈவுத் தொகையைப் பயன்படுத்தியும் ஏறக்குறைய 46 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியைத் திரட்ட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
இந்தோனீசியக் குழந்தைகள் பட்டினியால் வாடக் கூடாது. நாட்டு மக்களும், குழந்தைகளும் வயிறார உணவு உண்ண வேண்டும் என்று சென்ற வாரம் திரு பிரபோவோ கூறினார்.