ஜகார்த்தா: இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ இரண்டு அரசியல் பிரமுகர்கள் உட்பட 1,000க்கும் அதிகமானோருக்குக் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்கியுள்ளார். இம்மாதம் 17ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு திரு சுபியாந்தோ அந்த மன்னிப்பை வழங்கினார்.
முன்னாள் வர்த்தக அமைச்சர் தாமஸ் திரிகாசி லெம்போங், மூத்த எதிர்க்கட்சி அதிகாரி ஹஸ்தோ கிறிஸ்டியந்தோ ஆகியோர் மன்னிப்பு பெற்றோரில் அடங்குவர்.
திரு லெம்போங், அதிபர் தேர்தலில் திரு சுபியாந்தோவுக்கு எதிராகப் போட்டியிட்ட அனிஸ் பஸ்வேடனுக்கு முக்கிய ஆலோசகராக இருந்தார்.
திரு ஹஸ்தோ இந்தோனீசிய ஜனநாயகப் போராட்டக் கட்சியின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.
அவர்கள் இருவரின் மன்னிப்புக்கு அதிபரின் கடிதங்களைப் பெற்றதை அடுத்து இந்தோனீசிய நாடாளுமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 31) ஒப்புதல் அளித்தது. அவர்கள் இருவரும் அண்மையில் ஊழல் தொடர்பான குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
இந்தோனீசியாவின் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நாடாளுமன்ற ஒப்புதலுடன் கருணை அடிப்படையில் மன்னிப்பு வழங்க அதிபருக்கு அதிகாரம் உள்ளது.
திரு லெம்போங்கின் சட்டக் குழுவின் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு ஏற்கெனவே குறைபாடுள்ள சட்ட நடைமுறையில் செய்யப்பட்ட அரசியலமைப்புத் திருத்தம் என்று வருணித்தது.
திரு ஹஸ்தோவின் வழக்கறிஞர்கள் அதிகாரபூர்வ அதிபர் சாசனத்தைப் பெற காத்திருப்பதாகக் கூறினர்.