ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நடைபெறும் மிகப்பெரிய பேரிடர் மீட்புப் பயிற்சியில், 19 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,200 ராணுவப் படையினரும் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், ‘கூடுதல் ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டம்’ (ஏடிஎம்எம்-பிளஸ்) கட்டமைப்பின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெறும் மிகப் பெரிய பயிற்சி அது.
செப்டம்பர் 20 முதல் 26 வரை மேற்கு ஜாவாவின் பான்டனில் நடைபெறும் ‘எக்சர்சைஸ் டிரைடென்ட் ரிசால்வ்’ (Exercise Trident Resolve) எனும் அந்தப் பயிற்சி, ஆசியான் நாடுகளையும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய 8 பங்காளிகளையும் ஒன்றிணைக்கிறது.
இதற்கு முன்னர், இதைவிட அதிகப் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட கடைசி ‘ஏடிஎம்எம்-பிளஸ்’ பயிற்சி 2016இல் சிங்கப்பூரிலும் புரூணையிலும் நடைபெற்றது.
அந்தக் கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியில் 18 நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3,500 அதிகாரிகளுடன் 18 கடற்படைக் கப்பல்களும் 25 விமானங்களும் பங்கேற்றன.
இணையப் பாதுகாப்பு, மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், ராணுவ மருத்துவம் ஆகிய மூன்று நிபுணத்துவப் பணிக்குழுக்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் முதல் ‘ஏடிஎம்எம்-பிளஸ்’ பயிற்சி ‘டிரைடென்ட் ரிசால்வ்’ ஆகும்.
ஏழு இடங்களில், கடற்பகுதியில் நடத்தப்படும் அந்தப் பயிற்சி, தேடல், மீட்பு, மருத்துவ வெளியேற்றம், சிகிச்சை, உள்கட்டமைப்புச் சீரமைப்பு உள்ளிட்ட பெரிய அளவிலான பேரிடர் நடவடிக்கைகளின்போது ராணுவமும் அரசாங்கம் சார்ந்த அமைப்புகளும் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்பதைச் சோதிக்கிறது.
