ஜகார்த்தா: இந்தோனீசியா, விமானங்களுக்கான எரிபொருள் விலையை 28 விழுக்காடாக அதிகரிக்கவிருப்பதாய் அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் பயணங்களுக்கான கட்டணங்களை உயர்த்த விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதாகவும் அது குறிப்பிட்டது.
மத்திய கிழக்குப் போரால் அனைத்துலக அளவில் எண்ணெய் விலைகள் கணிசமாக அதிகரிப்பதால், விமான எரிபொருள் விலையை 10லிருந்து 38 விழுக்காடாக உயர்த்துவதாய் இந்தோனீசியப் பொருளியல் அமைச்சர் ஏர்லங்கா ஹர்டார்டோ செய்தியாளர்களிடம் கூறினார்.
அத்துடன் பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களும் ஒன்பதிலிருந்து 13 விழுக்காடு உயர்த்தப்படும் என்றார் அவர்.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய மலிவுக் கட்டண விமானச் சேவைகளை வழங்கும் ஏர்ஏஷியா எக்ஸ் நிறுவனமும் பயணக் கட்டணங்களை அதிகரிப்பதாகவும் பயணச் சேவைகளைக் குறைத்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டது.
ஜகார்த்தாவில் பயணச்சீட்டுகளுக்கான 11 விழுக்காட்டு வரியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று திரு ஏர்லங்கா தெரிவித்தார்.
அதை முன்னிட்டு அரசாங்கம் ஒரு மாதத்துக்கு 1.3 டிரில்லியன் ரூபியா மதிப்பிலான மானியத்தை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இரண்டு மாதங்கள் கழித்து தற்போதைய நடைமுறைகள் மறுஆய்வுசெய்யப்படும் என்ற அவர், மத்திய கிழக்கில் தொடரும் போர் நிலவரத்தைப் பொருத்து மாற்றங்கள் அறிவிக்கப்படும் என்றார்.

