ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நடுத்தர வகுப்பினர் பெரும்பாலும் பயன்படுத்தும் பெர்த்தாமேக்ஸ் எரிபொருளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அரசாங்க நிறுவனமான பெர்த்தாமினா, 92 ஆக்டேன், 95 ஆக்டேன் வகை பெட்ரோல் விலைகளைக் கிட்டத்தட்ட 32 விழுக்காடு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.
ஈரானில் மூண்ட போரைத் தொடர்ந்து அனைத்துலக அளவில் எண்ணெய் விலைகள் கணிசமாக அதிகரித்தன. இருந்தபோதும், இந்தோனீசியா அப்போது எரிபொருள் விலையில் எந்த மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.
தற்போது ஒரு லிட்டர் 92 ஆக்டேன் வகை பெட்ரோல் 16,250 ரூப்பியாவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குமுன் அதன் விலை 12,300 ரூப்பியா.
பெர்த்தாமேக்ஸ் கிரீன் என்று அழைக்கப்படும் ஒரு லிட்டர் 95 ஆக்டேன் வகை பெட்ரோலின் விலை 12,900லிருந்து 17,000 ரூப்பியாவாக அதிகரித்துள்ளது.
ஈரான் போர் மூண்டபோது மக்கள் நலனைக் காக்க எரிபொருள் விலையைக் கூட்ட வேண்டாம் என்று பெர்த்தாமினா நிறுவனத்துக்கு இந்தோனீசிய அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், எரிபொருள் விலையை உயர்த்தாமல் வைத்திருந்ததற்காகப் பெர்த்தாமினா நிறுவனத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
“அரசாங்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் அடிப்படையில் பெட்ரோல் விலைகள் உயர்த்தப்பட்டன,” என்று பெர்த்தாமினா நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பெர்த்தாலைட் என்று அறியப்படும் 90 ஆக்டேன் ரக எரிபொருளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று பெர்த்தாமினா குறிப்பிட்டது.

