தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச்சென்ற படகை இந்தோனீசியக் கடற்படை திருப்பி அனுப்பியது

2 mins read
d3d9d118-6d69-4004-a3c4-45f7c9cc1888
கடந்த நவம்பரிலிருந்து 1,500க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் இந்தோனீசியாவைச் சென்றடைந்துள்ளனர். - படம்: இபிஏ

ஜகார்த்தா: மியன்மாரிலிருந்து ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்றை அச்சேயில் உள்ள இந்தோனீசியக் கடற்படை கப்பல் ஒன்று திருப்பி அனுப்பியது.

இந்தோனீசிய ராணுவப் பேச்சாளர் அந்தத் தகவலைத் தெரிவித்தார். அதிகமான அகதிகள் அங்குச் செல்லும் நிலையில், உள்ளூர்வாசிகள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தப் படகு சுமத்ராவுக்கு அப்பால் ‘வே’ தீவுக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதியில் காணப்பட்டதாக ராணுவப் பேச்சாளர் கூறினார்.

மியன்மாரில் உள்ள முஸ்லிம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ரோஹிங்யா அகதிகளை அந்தப் படகு ஏற்றிச்சென்றதாக இந்தோனீசிய ராணுவம் நம்பியதால், அதன் கப்பல் அந்தப் படகைப் பின்தொடர்ந்து சென்றது.

படகில் எத்தனை ரோஹிங்யா அகதிகள் இருந்தனர் என்பது பற்றி தெரியவில்லை என்றார் பேச்சாளர்.

கடந்த நவம்பரிலிருந்து 1,500க்கும் மேற்பட்ட ரோஹிங்யா அகதிகள் இந்தோனீசியாவைச் சென்றடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் (ஐநா) அகதிகள் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

அகதிகளைக் கொண்டுள்ள அதிகமான படகுகள் இந்தோனீசியாவைச் சென்றடைவதால், உள்ளூர்வாசிகள் மேலும் கோபமடைந்துள்ளனர்.

டிசம்பர் 27ஆம் தேதி, அச்சே மாநிலத்தில் நூற்றுக்கணக்கான ரோஹிங்யா அகதிகளைக் கொண்ட நிலையம் ஒன்றினுள் பல இந்தோனீசிய மாணவர்கள் நுழைந்தனர். அகதிகள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எளிதில் பாதிக்கப்படக்கூடிய அகதிகள் குடும்பங்கள், கும்பல் ஒன்றால் தாக்கப்படுவதைக் காண மிகவும் வருத்தமாக இருந்ததாக ஐநா அமைப்பு கூறியது.

பல ஆண்டுகளாக ரோஹிங்யா அகதிகள் மியன்மாரை விட்டு வெளியேறிவருகின்றனர். அங்கு அவர்கள் தெற்காசியாவிலிருந்து வந்த வெளிநாட்டவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களுக்குக் குடியுரிமை நிராகரிக்கப்படுகிறது. அவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்