ஆட்சி அதிகாரத்தில் இந்தோனீசிய ராணுவத்துக்குக் கூடுதல் பங்கு

2 mins read
6bb6812d-d97c-492c-a8a2-b763585c5a80
2004ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்ட இந்தோனீசிய தேசிய ஆயுதப் படைகள் சட்டம் திருத்தப்பட்டள்ளதை அடுத்து, முக்கிய அரசாங்கப் பதவிகளை ராணுவ அதிகாரிகள் ஏற்கலாம். முக்கிய அரசாங்கப் பதவி வகிக்க அவர்கள் ராணுவத்திலிருந்து ஓய்வுபெறவோ பதவி விலகவோ தேவையில்லை. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை இந்தோனீசியா நிறைவேற்றியுள்ளது.

அதன்படி ஆட்சி அதிகாரத்தில் அந்நாட்டின் ராணுவத்துக்கு இருக்கும் பங்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஜனநாயகத்தை சீர்குலைக்கக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இரும்புக் கரம் கொண்டு இந்தோனீசியாவை ஆட்சி செய்த முன்னாள் அதிபர் சுஹார்த்தோவை இது ஞாபகப்படுத்துவதாக அவர்கள் கூறினர்.

2004ஆம் ஆண்டில் அமலாக்கப்பட்ட இந்தோனீசிய தேசிய ஆயுதப் படைகள் சட்டம் திருத்தப்பட்டள்ளதை அடுத்து, முக்கிய அரசாங்கப் பதவிகளை ராணுவ அதிகாரிகள் ஏற்கலாம்.

முக்கிய அரசாங்கப் பதவி வகிக்க அவர்கள் ராணுவத்திலிருந்து ஓய்வுபெறவோ பதவி விலகவோ தேவையில்லை.

இதற்கு முன்பு ராணுவ அதிகாரிகள் பத்து அரசாங்க அமைப்புகளில் மட்டுமே பதவி வகிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அவை பெரும்பாலும் பாதுகாப்பு மற்றும் தற்காப்புடன் தொடர்புடையவை.

தற்போது 14 அரசாங்க அமைப்புகளில் ராணுவ அதிகாரிகள் முக்கிய பதவி வகிக்கலாம்.

இந்தோனீசியாவின் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு, தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையம் ஆகியவை அவற்றில் அடங்கும்.

ராணுவ அதிகாரிகளின் பணி ஓய்வு வயதும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கீழ்நிலை அதிகாரிகளின் பணி ஓய்வு வயது 58ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நடுநிலை மற்றும் உயர்நிலை அதிகாரிகளின் பணி ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நான்கு நட்சத்திர ஜெனரல்கள் 63 வயது வரை ராணுவத்தில் பதவி வகிக்கலாம்.

அதிபர் அனுமதித்தால் அவர்களது பதவிக்காலம் 65 வயது வரை நீட்டிக்கப்படலாம்.

இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்