தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பல்லாயிரம் பேரை நிரந்தரமாக இடமாற்ற இந்தோனீசியா திட்டம்

1 mins read
fbe24979-9139-4451-aaf2-d99f631b98bb
லெவோட்டோபி லக்கி-லக்கி எரிமலை பலமுறை குமுறியது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: லெவோட்டோபி லக்கி-லக்கி (Lewotobi Laki-laki) எரிமலை பலமுறை குமுறியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களை நிரந்தரமாக இடம் மாற்ற இந்தோனீசிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அந்த எரிமலைக் குமுறல்களால் குறைந்தது ஒன்பது பேர் மாண்டனர், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லெவோட்டோபி லக்கி-லக்கி, கிழக்கு நுசா தெங்காரா மாநிலத்தில் ஃபுளோரஸ் தீவில் அமைந்துள்ளது. அது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) குமுறியது.

பின்னர் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (நவம்பர் 4, 5) அந்த எரிமலை மீண்டும் குறைந்த சீற்றத்துடன் குமுறியது. லெவோட்டோபி லக்கி-லக்கிக்கு ஆக உயரிய எச்சரிக்கை நிலை வழங்கப்பட்டது.

வருங்காலத்தில் இந்த எரிமலை இதேபோல் குமுறினால் நிலைமையைக் கையாள குடியிருப்பாளர்களை நிரந்தரமாக இடம் மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக இந்தோனீசியாவின் பேரிடர் அமைப்பின் தலைவர் சுஹார்யாந்தோ புதன்கிழமையன்று (நவம்பர் 6) அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். எரிமலைக்கு ஏழு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இருக்கும் குடியிருப்பாளர்களை இடம் மாற்ற அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எரிமலைக்கு ஆக அருகில் இருக்கும் கிராமங்களில் 16,000க்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். அவர்களில் எத்தனை பேரை நிரந்தரமாக இடம் மாற்றுவது என்பதை அரசாங்கம் கணக்கிட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்