ஜகார்த்தா: புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான பாலித்தீவில் இலகு ரயில் கட்டமைப்பை அமைக்க இந்தோனீசியா திட்டமிடுகிறது.
விமான நிலையத்திலிருந்து ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம் என்று கடல்துறை விவகாரம், முதலீட்டிற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுகுத் பன்ட்ஜைத்தான் கூறினார்.
சுற்றுப்பயணிகளை நம்பியிருக்கும் பாலிக்கு ஆண்டுதோறும் மில்லியன்கணக்கான வெளிநாட்டவர்கள் செல்கின்றனர். கொவிட்-19 கிருமிப் பரவலுக்குப் பிறகு மீண்டும் எல்லைகள் திறக்கப்பட்டதையடுத்து, பாலியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இலகு ரயில் கட்டமைப்பு நிலத்துக்கு அடியில் கட்டப்படும் என்றும் அது அத்தீவின் அனைத்துலக விமான நிலையத்தையும் சாங்கு, செமின்யாக் ஆகிய முக்கிய சுற்றுலாப் பகுதிகளையும் இணைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2025-2026ஆம் ஆண்டுவாக்கில், ஆண்டுதோறும் அவ்விமான நிலையத்திற்கு 24 மில்லியன் பேர் வருகைபுரிவர் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சர் லகுத் குறிப்பிட்டார்.