2016க்குப் பிறகு வரியில்லா வருமான வரம்பில் முதன்முறையாக மாற்றம் செய்ய இந்தோனீசியா திட்டம்

2016க்குப் பிறகு வரியில்லா வருமான வரம்பில் முதன்முறையாக மாற்றம் செய்ய இந்தோனீசியா திட்டம்

படம்: புளூம்பெர்க்

01 Oct 2026 - 4:48 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசிய அரசாங்கம், செலவிடக்கூடிய வருமானத்தை அதிகரிக்க, வரியில்லா வருமான வரம்பை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளில் செய்யப்படும் முதல் மாற்றம் அது.

இந்தோனீசியாவில் தற்போது 54 மில்லியன் ரூப்பியா (S$3,800) அல்லது அதற்கும் குறைவான வருடாந்தர வருமானத்திற்கு வரி எதுவும் விதிக்கப்படுவதில்லை. குறைந்த வருமானம் ஈட்டுபவர்களைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட அந்த வரம்பு, கடைசியாக 2016ஆம் ஆண்டில்தான் மாற்றியமைக்கப்பட்டது.

2027ஆம் ஆண்டுக்கான அந்த வரியில்லா வருமான வரம்பில் தகுந்த மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கணக்கிட்டு வருவதாகப் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் எர்லாங்கா ஹார்ட்டார்ட்டோ புதன்கிழமை (செப்டம்பர் 30) தெரிவித்தார்.

இருப்பினும், அது குறித்த மற்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

செலவழிக்கும் ஆற்றலை அதிகரிக்கும் நோக்கில் மற்ற நடவடிக்கைகளை எர்லாங்கா அறிவித்தபோது, அந்தக் கருத்து வெளிவந்தது.

தற்போது ஊழியர்கள் அதிகம் தேவைப்படும் துறைகளிலும் சுற்றுலாத் துறையிலும் உள்ள ஊழியர்களுக்கு மட்டுமே அந்த வரியில்லா வருமான வரம்பு பொருந்தும்.

மாதத்திற்கு 10 மில்லியன் ரூப்பியாவுக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் அனைவருக்கும் வருமான வரிவிலக்கை நீட்டிப்பது புதிய நடவடிக்கைகளில் அடங்கும்.

இவ்வாண்டின் இறுதிக் காலாண்டில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு ரொக்கத்தையும் உணவையும் வழங்க, அரசாங்கம் கிட்டத்தட்ட 31 டிரில்லியன் ரூப்பியா ஒதுக்கும் என்றும் எர்லாங்கா கூறினார்.

குறிப்பிட்ட சொத்து விற்பனைகளுக்கான வரிவிலக்கு 2027ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அந்தப் புதிய ஊக்குவிப்பு நடவடிக்கைகள், 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தொகுப்புத்திட்டத்தையும் தாண்டி வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்