ஜகார்த்தா: அமெரிக்க உணவு, மற்ற பொருள்களின் இறக்குமதியை இந்தோனீசியா அதிகரிக்க உள்ளது.
அதே வேளையில் அது மற்ற தென்கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களைக் குறைக்க உள்ளதாக அந்நாட்டின் தலைமைப் பொருளியல் ஆலோசகர் அயர்லங்கா ஹர்டோட்டோ வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
திரு அயர்லங்கா உயர்மட்டக் குழுவிற்குத் தலைமை தாங்கி தமது அமெரிக்க சகாக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு இந்தோனீசியப் பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 32 விழுக்காடு வரி தொடர்பில் அவர் பேச்சு நடத்துவார். அந்த வரி விதிப்பு தற்பொழுது 90 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தோனீசியா அமெரிக்க இறக்குமதிகளை அமெரிக்க டாலர் 19 பில்லியன் (S$25 பில்லியன்) அளவுக்கு உயர்த்த தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் அமெரிக்க டாலர் 10 பில்லியன் அளவில் எரிசக்திப் பொருள்கள் அடங்கும் என்றும் இதன் மூலம் அது அமெரிக்காவுடனான வர்த்தக உபரியை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் தனது நாட்டின் மீதான அமெரிக்க வரி விதிப்பை தவிர்க்க அது எண்ணம் கொண்டுள்ளது.
“மேலும், கோதுமை, சோயா பருப்பு, சோயா பருப்பு வகை வேளாண் உணவுப் பொருள்களுடன் முதலீட்டுப் பொருள்களையும் வாங்கும்,” என்று திரு அயர்லங்கா செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார்.

