ஜகார்த்தா: தனது சிறைகளில் உள்ள ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த கைதிகளை இந்தோனீசியா, இவ்வாண்டிறுதிக்குள் திருப்பி அனுப்பத் திட்டமித்துள்ளது என்று அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் வியாழக்கிழமையன்று ந்வம்பர் 28) தெரிவித்தார்.
மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்ட பிலிப்பீன்சைச் சேர்ந்த மாது, ‘பாலி நைன்’ (Bali Nine) என்றழைக்கப்படும் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களைக் கொண்ட குழுவில் எஞ்சியவர்கள் உள்ளிட்டோர் இந்தோனீசியாவில் சிறைத் தண்டனையை நிறைவேற்றிவரும் அதிகம் பேசப்படும் கைதிகளில் அடங்குவர்.
வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் சம்பந்தப்பட்ட கைதிகளை அவர்களின் நாடுகளிடம் ஒப்படைப்பது தங்கள் இலக்கு என்றார் இந்தோனீசியாவின் மூத்த அமைச்சர் யுஸ்ரில் இஹ்ஸா மகேந்திரா. பிலிப்பீன்சைச் சேர்ந்த கைதியான மேரி ஜேன் வெலோசோவைத் திருப்பி அனுப்ப இந்தோனீசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோ அனுமதி வழங்கியதாக திரு யுஸ்ரில் சென்ற வாரம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளதுள்ளது.
ஜேன் வெலோசோவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2015ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2.6 கிலோகிராம் ஹெராயின் உள்ள பெட்டியுடன் வெலோசோ கைது செய்யப்பட்டார்.

