தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தோனீசியாவில் இருமல் மருந்தின் தொடர்பில் விசாரணை

1 mins read
1d1c59e0-1c55-43d1-a147-e9012a5e12bf
மாசடைந்த இருமல் மருந்துகளுக்கான விநியோகத்தில் உலகளவில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் விசாரிக்க உலகச் சுகாதார நிறுவனம் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.  - படம்: பிக்ஸாபே

ஜக்கர்த்தா: இந்தோனீசியாவின் காவல்துறை அந்நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள அதிகாரிகள் குற்றச் செயல் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்து முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

அந்நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட பிள்ளைகளின் மரணங்களுக்குத் தொடர்பான மாசடைந்த இருமல் மருந்து குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அது நடத்தப்படுவதாக இரண்டு முன்னணி அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

2022ஆம் ஆண்டில் காம்பியாவிலும் உஸ்பெகிஸ்தானிலும் பல குழந்தைகளின் மரணங்களுக்குத் தொடர்புடைய மாசுகலந்த மருந்துகளுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்க உலக நாடுகள் எடுத்துவரும் முயற்சியில் ஆக அண்மைய நடவடிக்கை இது.

அத்தகைய மருந்துகளுக்கான விநியோகத்தில் உலகளவில் ஈடுபட்டிருக்கும் அனைவரையும் விசாரிக்க உலகச் சுகாதார நிறுவனம் உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

சரியான உட்பொருளுக்குப் பதிலாக நச்சு கலந்த ரசாயனங்கள் அடங்கிய இருமல் மருந்துகளைத் தயாரித்த மருந்து நிறுவனங்களுக்குக் கச்சா பொருள்களை இறக்குமதி செய்து விநியோகித்த இந்தோனீசிய நிறுவனங்களைச் சேர்ந்த எட்டு பேரைக் காவல்துறையினர் 2022ஆம் ஆண்டின் இறுதியில் கைது செய்தனர்.

காவல்துறையினர் பிபிஓஎம் அதிகாரிகள் பலரை விசாரணைக்கு அழைத்திருப்பதாகவும் விசாரணை தொடர்வதாகவும் அந்த வழக்கின் முன்னணிக் காவல்துறை அதிகாரி அண்டிக்கா உரஷ்யிடின் ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

பிபிஓஎம் அமைப்பில் குற்றச்செயலில் ஈடுபட்டதாக யார்மீதும் இதுவரை குற்றஞ்சாட்டப்படவில்லை. இறுதியில் காவல்துறையினர் குற்றச்சாட்டுகளைப் பிறப்பிக்கலாம் அல்லது நடவடிக்கை எடுக்காமலேயே விசாரணையை முடித்துவிடலாம்.

குறிப்புச் சொற்கள்