ஜகார்த்தா: சர்ச்சைக்குரிய இந்தோனீசிய அமைச்சர் பதவி இழந்துள்ளார்.
உயர் கல்வி, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சரான 69 வயது சட்ரியோ சுமந்த்ரி பிரோஜோநெகொரோவுக்குப் பதிலாக பிரயன் யுலியார்த்தோ பதவி வகிப்பார் என்று இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ புதன்கிழமையன்று (பிப்ரவரி 19) அறிவித்தார்.
புதன்கிழமை பிற்பகல் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள அதிபர் மாளிகையில் திரு பிரயன் அமைச்சராகப் பதவி ஏற்றார்.
அமைச்சராகப் பொறுப்பேற்க அதிபர் பிரபோவோ அழைப்பு விடுத்ததாக திரு பிரயன் கூறினார்.
அதிபர் வகுத்துள்ள திட்டங்களுக்கு ஏற்ப அமைச்சை வழிநடத்தும்படி தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அரசாங்க ஊழியர் ஒருவரை திரு சட்ரியோ முறையற்ற வகையில் பதவி நீக்கம் செய்ததாகக் கூறி மத்திய ஜகார்த்தாவில் கடந்த ஜனவரி மாதம், உயர் கல்வி, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் கடந்த 24 ஆண்டுகளாக அந்த அமைச்சில் பணியாற்றுபவர் என்றும் அவர் முக்கிய பதவியில் இருப்பவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமது மனைவி கூறியதைக் கேட்டு திரு சட்ரியோ அவரைப் பதவி நீக்கம் செய்ததாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பலர் ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு, பதவிநீக்கம் ரத்து செய்யப்பட்டது.

