குறைகூறலுக்கு ஆளான இந்தோனீசிய அதிபர் தேர்தல் முன்னணி வேட்பாளர்

2 mins read
1914e2e9-1fc6-45be-afc5-794b86b2ca12
இந்தோனீசிய தற்காப்பு அமைச்சரும் அதிபர் தேர்தல் வேட்பாளருமான திரு பிரபோவோ சுபியாந்தோ, சக வேட்பாளர் கிப்ரன் ரகாபுமிங் ரகாவுடன், தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் முன்னணி அதிபர் வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோ கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான தேர்தல் விவாதத்தில் குறைகூறலுக்கு ஆளானார்.

திரு பிரபோவோவுக்கு எதிராகப் போட்டியிடும் மற்ற இரண்டு வேட்பாளர்கள், தற்காப்பு அமைச்சர் என்ற முறையில் அவர் வகுத்த ராணுவக் கொள்முதல் உத்தியைக் குறிவைத்து, அவர் கண்மூடித்தனமாகவும், ஊதாரித்தனமாகவும் செயல்படுவதாகக் கூறினர்.

மூன்றாவது முறையாகப் போட்டியிடும் முன்னாள் சிறப்புப் படை தளபதியான திரு பிரபோவோ, வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலுக்கான கருத்துக்கணிப்புகளில் முன்னணி வகித்துவந்துள்ளார்.

இருப்பினும், இரண்டாம் முறை நடைபெற்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அவரது ராணுவ நவீனமயமாதல் திட்டம் அதிக அளவில் குறைகூறலுக்கு உள்ளானது.

ஜகார்த்தாவின் முன்னாள் ஆளுநர் அனீஸ் பஸ்விடான், பயன்படுத்தப்பட்ட ராணுவச் சாதனங்களை வாங்குவதற்கான திரு பிரபோவோவின் திட்டங்களுக்குக் கண்டனம் தெரிவித்தார். போர் விமானங்களும் அந்த ராணுவச் சாதனங்களில் அடங்கும்.

அதோடு, சென்ற ஆண்டு ரகசியத் தகவல்களை வெளிப்படுத்தப்போவதாக மிரட்டிய கணினி ஊடுருவிகளிடம் இருந்து திரு பிரபோவோவின் தற்காப்பு அமைச்சு தன்னைத் தானே அதனைப் பாதுகாக்கத் தவறியதாகவும் திரு அனீஸ் குறைகூறினார்.

விவாதத்தில் கலந்துகொண்ட ஆளுங்கட்சி வேட்பாளர் கஞ்சார் பிரனாவோ, வரவுசெலவு விவகாரங்கள் காரணமாக அரசாங்கம் தள்ளிவைத்திருக்கும் விமான ஒப்பந்தம் கண்மூடித்தனமாகத் திட்டமிடப்பட்ட ஒன்று எனக் கூறினார்.

இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட சாதனங்களை வாங்குவதற்கான உத்தி, ஆயுதப் படையை நவீனமயமாக்குவதற்கு அவசியமானது என்று திரு பிரபோவோ கூறினார். ஏற்கெனவே 15 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட அந்த விமானங்கள் 25 முதல் 30 ஆண்டுகள் வரை இயங்கக்கூடியவை என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்