இந்தோனீசியா: பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் சிறைக்கைதிகள்

இந்தோனீசியா: பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் சிறைக்கைதிகள்

2 mins read
62ef9332-1773-4087-a4a1-ad15573d20f4
தற்போது நாடு முழுதுமுள்ள சிறைச்சாலைகளிலும் தடுப்புக் காவல் நிலையங்களிலும் கிட்டத்தட்ட 70 சமையற்கூடங்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. - கோப்புப்படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு சமைக்கும் சமையற்கூடங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் ஊட்டச்சத்து அமைப்பு (பிஜிஎன்) அறிவித்திருக்கிறது.

அவ்வாறு சிறைச்சாலைகளில் நடத்தப்படும் சமையற்கூடங்களில் அனைத்து உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளும் செயல்பாட்டு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்படும் என்று பிஜிஎன் தலைவர் தடன் ஹிந்தாயனா திங்கட்கிழமை (மே 11) தெரிவித்தார்.

இந்தத் திட்டம் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சுகாமிஸ்கின் சிறைச்சாலையில் முன்னோடித் திட்டமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அங்குள்ள சிறைக்கைதிகளில் 47 பேர் இலவச உணவு சமைக்கும் திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் நாள்தோறும் 3,450க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு சமைக்கின்றனர் என்றும் திரு ஹிந்தாயனா விளக்கினார்.

“இது சிறைக்கைதிகளிடம் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதைக் காண்கிறோம். மற்றவர்களுக்குச் சேவையாற்றுவதன்மூலம் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதாக அவர்கள் உணர்கின்றனர். சமூகத்திற்குப் பங்களிக்க அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்,” என்றார் திரு ஹிந்தாயனா.

தற்போது நாடு முழுதுமுள்ள சிறைச்சாலைகளிலும் தடுப்புக் காவல் நிலையங்களிலும் கிட்டத்தட்ட 70 சமையற்கூடங்களை அமைக்கும் பணிகளைக் குடிநுழைவு, சீர்திருத்தத் துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது. அவற்றுள் 36 சமையற்கூடங்கள் இம்மாத இறுதிக்குள் செயல்படத் தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு சமையற்கூடத்திலும் கிட்டத்தட்ட 20 கைதிகள் உட்பட 46 முதல் 48 ஊழியர்கள்வரை இருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இலவச உணவுத் திட்டத்தை இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஏற்படுத்தினார். அதன்கீழ் மாணவர்கள், சிறுகுழந்தைகள், கர்ப்பிணிகள் என நாடு முழுவதும் அன்றாடம் கிட்டத்தட்ட 62 மில்லியன் பேர் பயன்பெறுகின்றனர்.

இருப்பினும், இலவச உணவுத் தரம் குறித்து அவ்வப்போது கவலைகள் எழுப்பப்படுகின்றன. அத்திட்டம் அறிமுகமானதிலிருந்து 33,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நச்சுணவால் பாதிக்கப்பட்டனர் என்று இந்தோனீசியக் கல்விக் கண்காணிப்புக் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்